புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 09, 2021)

நிறைவான அறுவடை

சங்கீதம் 126:5

கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.


நன்மை செய்து பாடுகளை அனுபவிக்கின்ற தம்முடைய பிள்ளைகளை தேவன் மறந்து போவாரோ? உனக்கு அநியாயங்களையும் அக்கிரமங்களையும் செய்தவர்களை மன்னித்து மறந்து விடு என்று கூறிய தேவன் உங்களது கண்ணீரையும், உங்கள் மனஇரக்கத்தையும் மறந்து விடுவா ரோ? சற்று சிந்தித்துப் பாருங்கள். “நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன். என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது. என் மாம்சத்தில் ஆரோக்கியம் இல்லை. நான் பெலனற்றுப் போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன். ஆண்டவரே, என் ஏங்க லெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது. என் தவிப்பு உமக்கு மறைவாயி ருக்கவில்லை. என் உள்ளம் குழம்பி அலைகிறது. என் பெலன் என்னை விட்டு விலகி, என் கண்களின் ஒளி முதலாய் இல்லாமற்போயிற்று. என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள். என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, நாள்முழுதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள். நானோ செவிடனைப்போலக் கேளா தவனாகவும், ஊமையனைப்போல வாய்திறவாதவனாகவும் இருக்கி றேன். காதுகேளாதவனும், தன் வாயில் மறு உத்தரவுகள் இல்லாதவனு மாயிருக்கிற மனுஷனைப்போலானேன். கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன். என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறு உத்தரவு கொடுப்பீர்” என்று தாவீது தன் வாழ்வில் தனக்கேற்பட்ட இன்னல்களையும், தான் கர்த்தர்மேல் கொண்டுள்ள நம்பிக்கையையும் பற்றிக் கூறியிருக்கின்றார். நம் அலைச்சல்களை தேவன்; அறிந்திருக்கின்றார். நம் கண்ணீர் அவருடைய கணக்கில் உள்ளது. ஆண்டுகள் கடந்து போனாலும் அவருடைய ஆளுகை முடிவதில்லை. வானமும் பூமியும் அழிந்து போகும் ஆனால் அவருடைய வார்த்தை ஒழிந்து போவதில்லை. அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்திருக்கிறவர்கள், அதையே அறுக்கிறார்கள். நீங்களோ உயர்விலும், தாழ்விலும், சோதனையிலும், வேதனைiயிலும், கண் ணீரின் பாதையிலும் திவ்விய சுபாவத்திற்குரிய விதைகளை விதையுங்கள். கர்த்தர் உங்கள் கண்ணீரைத் துடைப்பார். நீங்கள் தேற்றப்படும் நாள் ஒன்று உண்டு. நன்மைசெய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக. நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

ஜெபம்:

என் நிலைமையை நன்றாக அறிந்த தேவனே, என் இருதயத்தின் மன வேதனைகளை நீர் ஒருவரே அறிந்திருக்கின்றீர். நஷ்டம் வந்தாலும் நன்மை செய்யும் மனதை எனக்கு தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 6:8-9