புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 07, 2021)

உங்கள் வழிகளை ஆராய்ந்து அறியுங்கள்

எபிரெயர் 3:15

இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லி யிருக்கிறதே.


ஒரு குறிப்பிட்ட மாணவனைக் குறித்த சில முறைப்பாடுகளை வகுப்பாசிரியர் அந்த மாணவனுடைய பெற்றோருக்கு தெரியப்படுத்தினார். சொல்லப்பட்ட முறைப்பாடுகளை அலசி ஆராய்ந்து தங்கள் பிள்ளைக்கு நல்ல அறிவுரை கூறுவதற்குப் பதிலாக, அந்தப் பெற்றோர்களோ தங்கள் கண்களை வகுப்பாசிரியர் மேலே திருப்பினார்கள். வகுப்பாசிரியரை அனுப்பிவிட்டால், இந்த முறைப்பாடுகள் ஒன்றும் வீட்டிற்கு வராது என்று ஆசிரியருக்கு எதிராக செயற்படுவதற்குத் தருணம் பார்த்திருந்தார்கள். தங்களது கடமைகளை சரிவர செய்வதற்குப் பதிலாக ஆசிரியரை அகற்றிவிடுவதால் வரும் இலாபம் என்ன? இன்று நெறிமுறையான வாழ்க்கையை விரும்பாத மனி தர்களின் எண்ணிக்கை நாடுகளிலே பெருகிக் கொண்டு செல்வதால், தங்கள் வாழ்க்கை முறையை, குற்றப்படுத்தும் நாட்டின் சட்டதிட்டங்களைக் கூட மாற்றிவிடுவதற்கு மனிதர்கள் கடுமை யாக உழைக்கின்றார்கள். நாம் நம்முடைய வாழ்க்கையை எப்போதும் வேத வார்த்தைகளின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நடக்க வேண்டிய பாதையைவிட்டு தவறிச் செல்லும் போது, அதை கண்டித்து ஆலோசனை கூறுபவர்களைக் குறித்து உங்கள் மனநிலை எப்படியாக இருக்கின்றது? அவர்களை அவ்விடம்விட்டு அகற்றிவிட்டால் நாம் நம் இஷ்டப்படி வாழ்ந்து கொள்ளலாம் என்று சில மனிதர்கள் எண்ணிக் கொள்கின்றார்கள். வேறு சிலர், நாம் இந்த இடத்தைவிட்டு அகன்றுவிட்டால் விரு ம்பினபடி செய்து கொள்ளலாம் என்று எண்ணுகின்றார்கள். இன்னும் சிலர் இவர் தன்னுடைய இளைமைக் காலத்தில் செய்யாததையா என்னுடைய பிள்ளைகள் செய்கின்றார்கள் என்று, ஆலோசனை கூறும் மனி தர்களுடன் எதிர்த்து நிற்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் தம் வழிகளை திருத்திக் கொள்ள மனதில்லாமல் தங்கள் இருதயங்களை கடின ப்படுத்தி மனமேட்டிமையை வளர்த்துக் கொள்கின்றார்கள். அதன் முடிவானது பெரும் விழுகையாக இருக்கும். பிரியமானவர்களே, தேவ ஆலோசனைக்குக் கீழ்படியுங்கள். வேறு பலர் தேவ ஆலோசனையை அலட்சியம் செய்கின்றார்கள் என்பதற்காக உங்களுக்கு கொடுக்கப்பட்ட அருமையான வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதிருங்கள்.

ஜெபம்:

மன்னிக்கும் தேவனே, என் குற்றம் குறைகளை அறிக்கையிட்டு ஏற்ற சமயத்தில் உம்மிடத்தில் சகாயம் பெறும்படி உம் ஆலோசனைகளைப் பற்றிக் கொண்டிருக்கும் உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எரேமியா 26:13