புதிய நாளுக்குள்..

தியானம் (தை 30, 2021)

கசப்பான வாழ்க்கை மதுரமாகும்

யோவான் 16:20

உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.


நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், இஸ்ரவேல் தேச த்திலே பஞ்சம் உண்டாயிற்று. அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெ கேம் ஊரானாகிய எலிமெலேக்கு என்னும் ஒரு மனுஷன் தன் மனைவி நகோமியோடும், இரண்டு குமாரராகிய மக்லோன், கிலியோன் என்பவ ர்களோடும் மோவாப் என்னும் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான். அந்த நகோமிக்கு பெரும் துன்பம் உண்டாயி ற்று. அவளுடைய கணவனையும், இர ண்டு குமாரர்களையும் அவள் இழந்து, தன் இரண்டு மருமக்களோடு வாழ்ந்து வந்தாள். இஸ்ரவேல் தேசத்திலே பஞ்சம் தீர்ந்து போனபின்பு, நகோமியும் அவ ளுடைய இளைய மருமகள் ரூத் என்பவளும் தேசத்திற்கு திரும்பினார்கள். ஊரார் அவளை வாழ்த்திய போது, அவள் மறுமொழியாக தன் வாழ்வு மிகுந்த கசப்பாக மாறிவிட்டது என்று கிலேசப்பட்டாள். கசப்பான நாட்கள் அவள் வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த போதும், ஏழு குமா ரரைப் பார்க்கிலும் அருமையாயிருக்கிற ஒரு மருமகளை கர்த்தர் அவளுக்கு கொடுத்தார். ஏனெனில் அவள் வழியாக பெரும் ஆறுதலை நகோமியின் வாழ்க்கையிலே கர்த்தர் கட்டளையிட்டு, மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் சந்ததியானது அவள் மருமகள் வழியாக உண்டாகும்படி செய்தார். இந்தப் பூமியிலே இன்று சிலருடைய வாழ்க்கை வியாகுலம் நிறைந்ததாக இருக்கலாம். என் வாழ்நாட்கள் துன்பத்தில் கடந்து போயிற்றே என்று வருத்தப்படலாம். உங்கள் வேண்டுதல்களை கர்த்தருடைய சமுகத்தில் தெரியப்படுத்தி, பொறுமையோடு அவருடைய நேரத் திற்காக காத்திருங்கள். என் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையிலிருந்து இனி எப்படி என் உள்ளத்தில் சமாதானம் வரமுடியும் என்ற நம்பிக்கையற்ற நிலை உங்கள் வாழ்வில் ஏற்பட்டிருக்கலாம்? எனக்கும் சமாதானத்திற்கும் வெகு தூரம். அது சாத்தியமற்ற செயல் என்று நீங் கள் எண்ணலாம். மனிதனுடைய பார்வையிலே சாத்தியமற்ற செயல்களை கர்த்தர் வாய்க்கப் பண்ணுகின்றவராயிருக்கின்றார். கர்த்தருடைய வழிகள் அதிசயமானவைகள். அவருடைய செயல்கள் மனிதனுடைய அறிவுக்கு அப்பாற்பட்டவைகள். சகலவித ஆறுதலின் தெய்வமாகிய கர்த்தர்மேல் பெலன்கொள்ளுகிற மனுஷர்கள் பாக்கியவான்கள். அவர்கள் அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்;. அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள். எனவே உங்கள் பாரத்தை கர்த்தர்மேல் வைத்துவிடுங்கள்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, நீரே என் சகாயர். பரம தந்தையே, உம்முடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. நீர் எனக்குச் செய்த நன்மைகள் யாவற்றிற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 84:5-12