புதிய நாளுக்குள்..

தியானம் (தை 27, 2021)

தேவ நீதி நிறைவேறும்

யாக்கோபு 1:20

மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.


தாம் இந்த உலகிற்கு வந்த நோக்கம் நிறைவேறுகின்ற வேளை வந்தது என்றும் மனிதகுலத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் பாவ நிவாரண பலியாக தம்மைதாமே ஒப்புக் கொடுக்க வேண்டும் என்பதையும் இயேசு அறிந்திருந்தார். ஆனால், அவரை ஏற்றுக் கொள்ளாத மதத்தலைவர்க ளும், ஜனத்தின் மூப்பரும் இயேசுவை பிடிக்கும்படிக்கு பட்டயங்களோடும் தடிகளோடும் வந்தார்கள். அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். பிரியமானவர்களே, அன்று இயேசு தம்மை அவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் அவர்கள் அவரை கைது செய்திருக்க முடியாது. ஆனால் நாங்கள் மீட்படையும்படிக்கு வழியை உண்டு பண்ணும்படிக்கான பிதாவின் அநாதி தீர்மானம் தம்மில் நிறைவேற தம்மை ஜீவ பலியாக கொடுத்தார். அன்று இயேசுவினுடைய சீஷன் இயேசுவைக் காக்க பட்டயத்தை உருவியது போல, இன்றும் பல மார்க்கத்தார் தங்கள் மத நம்பிக்கைகளை காக்கும்படி தெருக்களிலே இறங்கி, பல வன்முறைகளில் ஈடுபடுகின்றார்கள். இயேசுவின் வழியை பற்றிக் கொண்டிருந்த, இயேசுவின் அப்போஸ்தலர்கள் இரத்த சாட்சிகளாக மரித்தார்கள். எங்கள் போராயுதங்கள் மாம்ச பெலன் அல்ல. அப்படியானால், சர்வ வல்லமையுள்ள தேவன் ஒரு வார்த்தையினால் இந்த உலகத்தை அழித்துப்போட வல்லவராக இருக்கின்றார். அறியாமையிலும், குருட்டாட்டத்திலும் வாழும் ஜனங்கள், தம்முடைய பிள்ளைகளை துன்புறுத்துவதை அறிந்திருந்தும், குருட்டாட்டத்திலே வாழும் தேவனையறியாதவர்கள் மீட்படையும்படி நீடிய பொறுமையுள்ளவராக இருக்கி ன்றார். எங்களுடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்காது. எனவே, உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும், வேலையிலும், சபையிலும், தேசத்திலும் தேவனுடைய சித்தம் உங்களில் நிறைவேறும்படி இடங் கொடுங்கள். தேவ நீதி நிறைவேறும் காலம் சமீபித்திருக்கின்றது.

ஜெபம்:

தேவ நீதி நிறைவேற இடங்கொடுங்கள் என்ற தேவனே, உம்மு டைய அநாதி தீர்மானம் எங்களில் நிறைவேறும்படிக்கு நீடிய பொறுமையுள்ளவர்களாக இருக்கும்படிக்கு பெலன் தந்து வழிநடத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யூதா 1:15