புதிய நாளுக்குள்..

தியானம் (தை 25, 2021)

பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம்

லூக்கா 15:7

இயேசு: மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.


ஒரு குழந்தையானது தன் தகப்பனார் தனக்கு வாங்கிக் கொடுத்த ஒரு பொம்மையை எப்போதும் தன் கையிலே வைத்திருந்தது. படுக்கைக்கு சென்றாலும், சாப்பிடச் சென்றாலும் அந்த பொம்மையானது தனக்கரு கிலில்லையென்றால் அது வீரிட்டு அழும், அந்த பொம்மையை அதனிடம் கொடுக்கும் வரைக்கும் அது தன் அழுகையை நிற்பாட்டமாட்டாது. அந்த பொம்மையானது அந்தக் குழந்தையின் மனதை கவர்ந்து கொண்டது. இன்று எங்கள் வாழ்க்கையை கவர்ந்து கொள்ளும் காரியங்கள் என்ன என் பதை ஆராய்ந்து பார்ப்போம். நாங்கள் யாருடைய ரசிகர்கள்? எதன்மேலே அல்லது எவர் மேலே எங்கள் ஆசை இருக்கின்றது? எதிலே எங்கள் ஓய்வு நேரங்கள் விரயமாகின்றது? யாருடன் எதைக்குறித்து அதிகமாக பேசுகின்றோம், எதை குறித்து அதிகமாக கேட்கின்றோம்? எதைக் குறித்து அதிகமாக வாசிக்கின்றோம்? எங்கள் அடிப்படைத் தேவைகள் தவிர்ந்த வேறு எவைகளிலே எங்கள் பணம் அதிகமாக விரயமாகுகின்றது? இவைகளுக்கு உண்மை மனதுடன் நீங்கள் உங்கள் பதில்களை கூறுவீர்களாக இருந்தால், உங்கள் வாழ்க் கையில் உங்களை கவர்ந்த பொம்மை எது என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம். பரலோக வாழ்க்கையின் முன்னனுபவம் (foretaste) இந்த உலகிலே எங்கள் உள்ளத்திலே கொடுக்கப்பட்டிருக்கின்றது. பூவுலகிலே நடக்கும் எந்த காரியத்தினாலே பரலோகத்திலே மகிழ்ச்சி உண்டாகின்றது என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? இந்த உலகத்திலே ஒரு மனிதனானவன் தன்னைத் தானே சோதித்தறிந்து, பாவங்களை உணர்ந்து, அவைகளிலிருந்து மனந்திரும்புகிறபோது, அதினிமித்தம் பரலோகத்தில் தேவனுடைய தூதருக்கு முன்பாக மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கின்றது. ஒருவரும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்றே இயேசு தம்மைப் பலியாக ஒப்புக் கொடுத்தார். இயேசுவை விசுவசித்து அவருடைய வார்த்தையின்படி வாழ்கின்ற யாவரும் அந்த நித்திய ஜீவனிலே பங்கடைகின்றார்கள். அந்த மனந்திரும்புதல் எங்கள் வாழ்க்கையில் உண்டானது போல, மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் உண்டாவதே ஒரு கிறிஸ்தவனின் வாழ்வின் சந்தோஷமாக இருக்க வேண்டும். காணாமற்போனதை கண்டுபிடித்த சந்தோஷம், இழந்து போனதை மீட்படையச் செய்யும் சந்தோஷம்.

ஜெபம்:

காணாமற்போன என்னை தேடிவந்த தெய்வமே, உம்மை அறியாமல், உம்மைவிட்டு தூரமாய் போய் தொலைந்திருக்கும் மனிதர்கள் உம்மை அறியவேண்டும் என்பதே என் ஆசையாக மாற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 18:11