புதிய நாளுக்குள்..

தியானம் (தை 23, 2021)

தேவ ஆவியின் வழிநடத்துதல்

நீதிமொழிகள் 22:6

பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து. அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.


வாலிபப்பிராயாயத்தை அடையும் தனது மகன், இந்தத் தவணை முடிவில், மத்திய பிரிவில் தன் படிப்பை முடித்து, பாடசாலையின் மேற்பிரிவுக்கு கல்வி கற்க செல்லப் போகின்றான் என்பதை நினைக்கும் போதெல்லாம், அவன் தாயானவள், “தேவனே, என் மகனுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை கொடுத்து, அவர் அவனை நடத்திச் செல்லும்படி கிருபை செய்யும்” என்று ஜெபித்துக் கொண்டாள். இந்த சம்பவத்தை மையமாக வைத்து, தேவனை விசுவசிப்ப வர்களின் நிலையையும் அதிலே எங் கள் நிலைமை எப்படி இருக்கின்றது என்பதையும் ஆராய்ந்து பார்ப்போம். பொதுவாக மனிதர்கள் தங்கள் பிள்ளை கள் பிறந்த நாள் முதல் அவர்கள் வைத்தியர்களாக, பொறியியளாலராக பெரிய கல்விமான்களாக வரவேண்டும் என்றே வேண்டிக் கொள்கின்றார்கள். அதாவது, நன்றாக கற்று, நல்ல வேலையை எடுத்து, கைநிறைய உழைத்தால் எங்களைப் போல கஷ்டப்படத் தேவையில்லை என்று எண்ணிக் கொள்கின்றார்கள். அப்படி செய்வதினால் ஒருவேளை இந்த உலகத்தில் அவர்களது பொருளாதார நிலைமை செழிப்பாக இருக்கலாம் ஆனால் இதனால் அவர்கள் தேவனுடைய சித்தம் செய்கின்றார்கள் என்பது பொருள் அல்ல. ஒரு பிள்ளை படித்து, ஆசிரியராகவோ, கணக்காளராகவோ, தொழில்நுட்ப நிபுணராகவோ, வைத்தியராகவோ, பொறியியளாலராகவோ, வக்கீலாவோ, வேறு வேலைகளை செய்பவர்களாகவோ அல்லது போதகராகவோ வரலாம். ஆனால் அவர்கள் பிறந்த நாளிலிருந்து தேவனோடு நடக்கின்றார்களா? தேவனுக்கு பயப்படும் பயம் அவர்கள் உள்ளத்தில் இருக்கின்றதா? அப்படி தேவ பயம் இருந்தால், ஊக்கமாக வேதத்தை படிக்கின்றார்களா? ஜெபம் செய்கின்றார்களா? தவறாது ஆலயத்திற்கு செல்கின்றார்களா? அவர்கள் வளர்ந்து வரும்போது தேவனை அறிகின்ற அறிவிலே வளர்ந்து பெருகின்றார்களா? தேவனுக்கென்று கனி கொடுக்கின்றார்களா? பிரியமானவர்களே, அந்த தாயானவளின் வாஞ்சையைப் பாருங்கள். தன் மகன் படித்து பெரிய பட்டதாரியாக வர வேண்டும் என்று கேட்கவில்லை மாறாக தேவ ஆவியானவர் தன் மகனை நடத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். தேவ ஆவியானவரின் வழிநடத்துதலின் பாதையிலே, இந்த உலகிலே தேவனுடைய சித்தம் நிறைவேறும், அவ்வாழ்க்கையில் வெற்றியும் சமாதானமும் இருக்கும், மறுஉலகிலே நித்திய வாழ்வை தேவன் தந்தருள்வார்.

ஜெபம்:

வழிநடத்துகின்ற தேவனே, எங்கள் அறிவு குறைவுள்ளது, நீர் எல்லாவற்றையும் அறிந்தவர். உம்முடைய வழிநடத்துதலின் மேன் மையை உணர்ந்தவர்களாக உமது வழியில் நடக்க எங்களுக்கு கிருபை செய்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 127:1-6

Category Tags: