புதிய நாளுக்குள்..

தியானம் (தை 21, 2021)

மன ஆறுதலை குலைத்துப் போடுபவைகள்

யாக்கோபு 3:14

உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்.


வீட்டிலிருக்கும் பழைய பொருட்களாகிய, இரும்பு, போத்தல், பித்தளை போன்றவற்றை கொடுத்தால், அதற்கு பதிலாக பணம் அல்லது உபயோகமுள்ள பொருட்கள் கொடுக்கப்படும் என்று சொல்லும் முகவர்கள் தெருவழிகளிலே செல்வதை நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் ஒரு மனிதன் தன் வீட்டிலிருக்கும் உபயோகமற்ற இரும்பு பொருளொன்றானது, அது என் பாட்டனாருடையது, அது எங்கள் பரம்பரை சொத்து எனவே அதை கொடுக்க முடி யாது என்று வைத்திருந்தான். எனினும் அவனால் அதை அவனுக்கு உபயோகமான பொருளாக மாற்றமுடியவில்லை. இதற்கொத்ததாகவே, உங்களிடமிருக் கும் மாம்சத்தின் கிரியைகளாகிய பெருமை, சமுக அந்தஸ்து, அகங்காரம், கசப்பு போன்றவற்றை என்னிடம் கொடுங்கள், அவைகளுக்குரிய கிரயத்தை செலுத்தி, உங்களுக்கு சமாதானத்தை தருவேன் என்று ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு அழைக்கின்றார். ஆனால் ஒரு மனிதன் நான் எல்லாவற்றையும் விட்டுவிடுவேன் ஆனால் தலைமுறை தலைமுறையாக நாங்கள் பேணிப் பாதுகாக்கும் எங்கள் குடும்பத்தின் சமுக அந்தஸ்தை நாங்கள் விட்டுவிடமாட்டோம். அது எங்கள் குடும்ப கௌரவம். எங்கள் பரம்பரை சொத்து என்று அதைப் பற்றிக் கொள்பவனாக இருந்தால், அவன் ஆன்மீக சமாதானத்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை. தேவனுடைய சமாதானமும், இந்த உலகத்தின் பெருமையும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. பிரியமானவர்களே, சிந்தியுங்கள். இன்று தேவ சமாதானத்தை உங்கள் இருதயத்தில் காத்துக் கொள்ள முடியாமல் உங்களை அங்கலாய்க்க வைக்கும் மாம்சத்தின் கிரியைகள் என்ன என்பதை ஆராய்ந்து பாருங்கள். “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்த னைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிட த்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.” என்று அறிக்கையிடுங்கள். வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு. தேவனுக்கு முன்பாக உங்களை தாழ்த்தி, உங்கள் மனப்பாரங்களை அவர்மேல் வைத்து விடுங்கள். அவர் உங்களுக்கு மனஆறுதலை தந்தருள்வார்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழும்படி அழைத்தவரே, எந்த மனிதனுடைய கிரியைகளாலும் நான் என் இருதயத்தை மாசு படுத்தாதபடிக்கு தெளிந்த புத்தியை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 55:22