புதிய நாளுக்குள்..

தியானம் (தை 16, 2021)

கர்த்தருடைய நாளுக்காக காத்திருங்கள்

2 பேதுரு 3:12

தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்


தேசிய மட்டத்தில் நடத்தப்படும் பல்கலைகழக நுழைவிற்கான உயர்தர பரீட்சையின் நாள்; முன்குறிக்கப்பட்டிருந்தது. உயர்தர வகுப்பில் படிக்கும் மாணவர்களில் ஒரு சிலர் நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவதையும் வீணாக நேரங்களை விரயமாக்குதலையும்விட்டுவிட்டு மிகவும் சிரத்தையுடன் பாடங்களை படிக்க ஆர ம்பித்தார்கள். வேறு சிலர், இன்னும் பத்து மாதங்களுக்கு மேல் உண்டு, கொஞ்சம் (fun) உல்லாசமாக இருப்போம் என்று காலத்தை விரயப்படுத்த ஆரம்பித்தார்கள். இன்னும் சிலர், தங் கள் சோம்பேறித்தனத்தினால் எப்போ தும் சாப்குப் போக்குகளை சொல்லிக் கொண்டே இருந்தார்கள். யார் எப்படியாக இருந்தாலும், அந்தப் பரீட்சையானது முன்குறித்த நாளிலே நடை பெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. எப்படியாயிருப்பினும் அந்த பரீட்சையின் முடிவுகள் தெரியவரும் நாளிலே ஒவ்வொருவரும் தங்கள் பிரயாசத்தின் பலனை அறுப்பார்கள். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும், ஒவ்வொரு சமயமுமுண்டு என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. அது போலவே, கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் ஒன்று உண்டு. அந்த நாளுக்காக ஆயத்தப்படும்படிக்கான காலம் இதுவே. ஒரு வேளை, இந்த உலகிலே ஒரு பரீட்ச்சைக்கான நாளை தவறவிட்டால், அடுத்த வருடத்திலே அந்த பரீட்சையை எடுத்துக்கொள்ளலாம். “இந்த பஸ் வண்டியை தவற விட்டால் அடுத்த பஸ் வண்டியில் ஏறிக் கொள்வோம்” என்று மனிதர்கள் கூறிக் கொள்வார்கள். கர்த்தருடைய நாளிலே அந்தப் பேச்சுக்கே இடமில்லை. அது கடைசி நாள். ஆனால் வாழ்நாட்களிலே எத்தனையோ தவறுகளை மனிதர்கள் விட்டாலும், அதிலிருந்து மனந் திரும்பி, தங்கள் வாழ்க்கையை சரி செய்து கொள்வதற்கு எண்ணற்ற சந்தர்ப்பங்களையும் நாட்களையும் தேவனாகிய கர்த்தர் கிருபையாய் கொடுத்திருக்கின்றார்;. ஆனால் தேவனாகிய கர்த்தரை அறிந்த மனிதர்கள் கூட இந்நாட்களிலே கர்த்தருடைய பெரிதான நாளைக் குறித்து எண்ணமற்றவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். யார் எப்படியாக இரு ந்தாலும் கர்த்தருடைய நாள் சீக்கிரமாய் வருகின்றது. அந்த நாளை பிதா ஒருவரே அறிவார். கர்த்தருடைய பெரிதான நாள் வரக் காத்திருக்கின்ற நீங்கள், கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஆயத்தப்படுங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் கருத்துடன் உம்முடைய நாளுக்காக காத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிரசங்கி 3:17