புதிய நாளுக்குள்..

தியானம் (தை 13, 2021)

மாறாத தேவனின் ஆளுகை

சங்கீதம் 112:7

துர்ச்செய்தியைக் கேட் கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்


குறிப்பிட்ட வருடத்தின் ஆரம்பப் பகுதியிலே, ஒரு கம்பனியின் வியாரபாரமானது அதன் உரிமையாளர் எதிர்பார்த்ததிற்கும் அதிகமாக இருந்ததால், வருட இறுதியிலே அந்த கம்பனியினின் இயக்குனருக்கு மிகை ஊதியம் (Bonus) வழங்குவதாக அதன் உரிமையாளர் கூறி யிருந்தார். அதன்பொருட்டு குறிப்பிட்ட இயக்குனர் அயராது உழைத்து வந்தார். வருடத்தின் இறுதிப் பகுதியிலே, தேசத்திலே ஏற்பட்ட பொருளா தார வீழ்ச்சியினால், அந்த கம்பனியின் வியாபாரம் வழமைக்கு மாறாக பெரும் வீழ்ச்சியைக் கண்டது. அதனால், அதன் உரிமையாளர் முன்குறித் திருந்த மிகை ஊதிய கொடுப்பனவை இரத்து செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால், அதன் இயக்குனர் பெரும் ஏமாற்றம் அடைந்தார். மனிதனுடைய வாழ்க்கையிலே ஒவ்வொரு கட்டத்திலும்; பல எதிர்பார்ப்புக்கள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையில்;, பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில், தொழிலதிபர் தொழிலாளருக்கிடையில், ஆசிரியர் மாணவர்களுக்கிடையில் மற்றும் ஊழியர்கள் விசுவாசிகளு க்கிடையில் இதே போலவே எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறா தவிடத்து மனிதர்கள் ஏமாற்றம் அடைகின்றார்கள். இதன் விளைவாக மனிதர்கள் மத்தியில் மனநோவுகளும், பிரிவினைகளும், பல பின்னடைவுகளும் ஏற்படுகின்றது. இந்த நிலைமைக்கு எந்த மனிதனும் விதிவி லக்கானவன் அல்ல. ஆனால் தேவனுக்குப் பயந்து அவருடைய வழியிலே நடப்பவர்களுக்கு, அதைத் தாங்கி கொள்ளும் பெலனை கர்த்தர் கொடுக்கின்றார். அது மட்டுமல்ல, இந்த உலகத்திலுள்ளவைகள் யாவும் அநித்தியமானவைகள் என்றும், அவை நிலையானவைகள் அல்ல என்றும் உணர்ந்து கொள்ளும் மெய்ஞானத்தை தருகின்றார். அதாவது, மனிதர்கள் யாவரும் ஏமாற்றுகின்றவர்கள் என்பது பொருளல்ல. மாறாக சில வேளைகளிலே மனிதர்கள் தாங்கள் சொன்ன வார்த்தையை நிறைவேற்ற வேண்டும் என்னும் வாஞ்சையுள்ளவர்களாக இருந்தாலும், சூழ்நிலைகளால் அவர்கள் மட்டுப்படுத்தப்படுகின்றார்கள் என்னும் அறிவை தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு தருகின்றார். எல்லா சூழ்நிலைகளிலும் அவர் மாறாதவராயிருக்கின்றார் என்னும் உண்மையை வெளிப்படுத்துகின்றார். அவருடைய ஆளுகையே நிலையானதும் நித்தியமானதும் என மறுபடியும் மறுபடியும் உறுதிப்படுத்துகின்றார். தேவ அன்பிலே பயமில்லை. பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்.

ஜெபம்:

என்றும் மாறாத தேவனே, மாறிப் போகும் இந்த உலகிலே, மன அழுத்தங்களால் மனமடிவடையாதபடிக்கு, உம்முடைய மாறாத அன்பை பற்றிக் கொண்டு வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 13:8