புதிய நாளுக்குள்..

தியானம் (தை 11, 2021)

குறைச்சலிலே உதவி செய்யுங்கள்

1 யோவான் 3:17

ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவ னுக்குள் தேவ அன்பு நிலை கொள்ளுகிறதெப்படி?


எங்கள் அயலிலுள்ள என் நண்பனின் குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை பாருங்கள். மிகையான ஐசுவரியத்திலே எவ்வளவு செழிப்பாக, ஒன்றிற்கு இரண்டு வீட்டோடு வாழ்கின்றார்கள். என் நண்பனின் அப்பா, பல ஆண்டுகளுக்கு முன், காரியசித்தியுள்ளவராக வளர்ந்து வரும் வியா பார ஸ்தாபனங்களில் முதலீடு செய்ததால் இன்று அதன் பலனை அறுக்கின்றார்கள் என்று தன் தந்தையிடம் ஒரு மகனானவன் கூறினான். தந்தையார் அவனை நோக்கி: மகனே, உன் வாழ்க்கையிலே இருக் கும் குறை என்ன? உண்ண உண வும், உடுக்க உடையும், தங்க வீடும் தந்த தேவனுக்கு நன்றியுள்ளவனாக இரு. உன் நண்பனின் குடும்பத்தைக் குறித்து விமர்சிப்பது என்னுடைய காரியமல்ல. ஆனால் எங்களுடைய குடியிருப்பு இந்த உலகத் திற்குரியதல்ல. எனவே எங்களுடைய முதலீடும் அதனால் உண்டா கும் பலனும் இந்த உலகத்திற்குரி யதல்ல. உன்னைவிடவும், மேலே இருக்கும் ஐசுவரியமுள்ளவர்கள் மேல் உன் கண்களை பதிய வைக்காமல், உனக்கு கீழிருக்கும் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, தங்குவதற்கு வீடின்றி தவிக்கும் கோடிக்கணக்கான ஏழைகளை நோக்கிப்பார். ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான். சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான். கருணைக்க ண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான். இவை சத்திய வேதம் கூறும் உண்மைகள். எனவே அவைகளிலே உன் முதலீடுகளை செய். இதனால் நீ பரலோகத்திலே உன் பலனை பெரிதாக அறுவடை செய்வாய் என்று அறிவுரை கூறினார். பிரியமானவர்களே, மனிதன் எதை விதைக்கின்றானோ அதையே அறுப்பான். மற்றவன் எதை விதைக்கின்றான் எதை அறுக்கின்றான் என்று நோக்காமல், எங்கள் வாழ்க்கையிலே நாங்கள் பரலோக மேலானவைகளிலே முதலீடு செய்வோம். குளிருக்கும் வெயிலுக்கும் ஒதுங்க வீடின்றி, உண்ண உணவின்றி, உடுக்கத் தகுந்த உடையின்றி வாடிடும் வறியவர்களுக்கு உங்கள் இருதயத்தை அடைத்து விடாதிருங்கள். தேவ அன்பு உங்களில் நிலைத்திருக்கும்படி மற்றவர்களின் குறைச்ச லிலே அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

ஜெபம்:

நித்திய வாழ்விற்கு அழைத்த தேவனே, நீர் எங்களுக்கு தந்திருப்பவைகளைக் குறித்து நன்றியறிதலுள்ளவர்களாக நாங்கள் இருக்கும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:27