புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 11, 2020)

ஆறுதல் வலையம்

கலாத்தியர் 6:2

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.


ஒரு ஊழியர், தான் இருக்கும் ஊரிலிருந்து வெகு தொலைவிலுள்ள ஒரு கிராமத்திற்கு, கால்நடையாக சென்று கொண்டிருந்தார். வெய்யி லின் காங்கை அதிகமாக இருந்தது, அவர் நடந்து செல்லும் பாதையோ கரடுமுரடாக இருந்தது. வழியிலே, சற்று ஒதுங்கி ஓய்வெடுப்பதற்கும் மரங்களோ அல்லது மறைவுகள் ஏதும் இருக்கவில்லை. பல மைல்கள் சென்ற பின்பு, போகும் வழியிலே ஒரு எளிமையான குடிசை வீடு தென்பட்டது. அந்த வீட்டிலிருந்தவர் கள், “தெரு வழியாக நடந்து செல்லும் அந்த ஐயா மிகவும் களைத்தி ருகின் றாரே” என்று கூறி, அவரை தங்கள் வீட்டிற்கு கூப்பிட்டு, தாகத்திற்கு தண் ணீர் கொடுத்தார்கள். தங்களிடம் இரு ந்த கொஞ்ச உணவையும், அந்த ஊழியருக்கு பகிர்ந்து கொடுத்தார்கள். பயணக் களைப்பால், இளைப்படை ந்திருந்த அந்த வயதான ஊழியருக்கு பெரும் ஆறுதலாக இருந்தார்கள். சற்று தரிந்திருந்து, களைப்பு ஆறிய பின்பு, அந்த வீட்டாரை மனதார ஆசீர்வதித்து, தான் செல்ல வேண்டிய கிராமத்தை நோக்கி தன் பயணத்தை மீண்டும் தொடர்ந்தார். இவ்வண் ணமாகவே, எங்கள் இல்லங்களும் உள்ளங்களும் ஆறுதலின் இடமாக இருக்க வேண்டும். இந்த உலகிலே, மனிதர்களுடைய வாழ்க்கையில் நாளாந்த பழு மிகவும் அதிகமாக இருக்கின்றது. பரலோகத்தை நோக்கி பிரயாணப்படுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் பல உபத்திரவங்க ளையும், சவால்களையும் சந்திக்கின்றார்கள். இதனால் பலர் இளைத்து சோர்வடைந்து போகின்றார்கள். அவர்கள் தரித்து இளைப்பாறுவதற்கு இடங்களை தேடுகின்றார்கள். கானகப் பாதையிலே இஸ்ரவேல் ஜன ங்கள் கானானை நோக்கி சென்று கொண்டிருப்பதைப் போல, நாங்கள் தாபரிக்கும் ஊராகிய பரம தேசத்தை நோக்கி சென்று கொண்டிருக்கி ன்றோம். எனவே ஒருவர் சுமையை ஒருவர் இன்னும் கூட்டி விடாமல், ஒருவரை ஒருவர் தாங்கி, ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்து கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்த வேண்டும். அந்த வயதான ஊழி யருக்கு ஆறு தலாக இருந்த அந்த ஏழைக் குடிலிலுள்ளவர்களைப் போல எங்கள் பேச்சுகள், செய்கைகள் யாவும் மற்றவர்களை உறுதி யூட்டுகின்றதாக மாற வேண்டும். இளைத்துப் போன ஆத்துமாக்க ளுக்கு, ஆறுதல் அளி த்து, புத்துணர்ச்சியை கொடுக்கும்படிக்கு எங்கள் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமானதாக மாற வேண்டும்.

ஜெபம்:

மேன்மையான அழைப்பைத் தந்த தேவனே, இந்த உலகிலே வாழும் நாட்களிலே, நீர் தந்த பெலத்தின்படி, நான் மற்றவர்களுக்கு ஆறுதல் அளிப்பவனா(ளா)க வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:28