புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 30, 2020)

கிருபையின் நாட்கள்

யோவான் 9:5

நான் உலகத்திலிருக்கை யில் உலகத்திற்கு ஒளி யாயிருக்கிறேன் என்றார்.


ஒரு சமயம் கர்த்தராகிய இயேசு தாமே பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான். பகற்காலமிருக்கு மட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண் டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது. நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார். பிரியமானவர்களே, கிருபையின் நாட்களிலே வாழ்ந்து வருகின்றோம். படைத்த தேவனை, அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக அவர் தமது குமாரனுடைய ஆவியை எங்கள் இருதயங்களில் அனுப்பினார். குமாரனாகிய இயேசுவிலிருந்த மெய் யான ஒளியை எங்கள் இருதயங்களில் பிரகாசித்தார். பாவ இருள் நிறைந்த உலகிலே, பாதை தெரியாமல் மாண்டு போகாதபடிக்கு, அந்த தேவ ஒளி எங்களில் இன்று பிரகாசிக்கின்றது. இது எங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பகற் காலம். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவர் எப்போதும் ஒளியாகவே இருக்கின்றார். அவருடைய ஆளுகை முடிவடைவதில்லை. அவர் எப்பொழுதும் கிரி யைகளை நடப்பிக்க வல்லவர். ஆனால், இந்த உலகிலே கிருபையின் நாட்கள் முடிவடைந்து போகும் போது ஒரு மனுஷனும் கிரியை செய்ய முடியாத இராக்காலம் மிக அருகில் வருகின்றதாய் இருக்கின்றது. எனவே எங்களுக்கு கொடுக்கப்பட்ட நாட்களையும் சந்தர்ப்பங்களையும் நாங்கள் பிரயோஜனப்படுத்திக் கொள்வோம். எப்படியெனில், முதலாவ தாக, கிறிஸ்துவின் நாளிலே, நாங்கள் கறைதிரை அற்றவர்களாக அவருக்கு முன்பாக நிற்கும்படிக்கு, இந்த நாட்களிலே நாங்கள் எங்களை ஆயத்தப்படுத்த வேண்டும். எப்போதும் நாம் ஆயத்தமுள்ளவர்களாக வாழ் ந்து கொண்டு, கர்த்தர் கொடுத்த பெலத்தின்படி, கர்த்தருடைய கிருபையின் நாட்களை குறித்த நற்செய்தியை மற்றவர்களுக்கு அறி விக்க வேண்டும். இந்த உலகமும் அதன் மாயையிலும் ஒருவரும் சிக்கி அழிந்து விடாதபடிக்கு, பகற்காலமாகிய இந்த கிருபையின் நாட்களை ஞானமுள்ளவர்களாய் பயன்படுத்துங்கள்.

ஜெபம்:

அன்புள்ள பரலோக தந்தையே, நீர் எங்களுக்கு தந்திருக்கும் இரட்சிப்பை அற்பமாக எண்ணாதபடிக்கு, கருத்தோடு உணர்வுள்ள வாழ்க்கை வாழும்படிக்கு என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 90:12