புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 18, 2020)

நற்கிரியை செய்வதில் உறுதியாய் இருங்கள்

கலாத்தியர் 6:9

நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதன் எப்போதும் நாட்டிலே வாழும் மனிதர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணமுடையவானாக செயற்பட்டு வந்தான். செல்லும் இடமெல்லாம் நன்மை செய்து வந்தபோதும் மனிதர்களிலே பலர் அவனை ஏற்றுக் கொள்ளாமல், தங்கள் கண்போன போக்கின்படியே வாழ்ந்து வந்ததை உணர்ந்த போது அவன் மனம் சோர்ந்து போனான். கர்த்தராகிய இயேசு இந்த பூமி யிலே வாழ்ந்த நாட்களிலே நன்மை கள் செய்கின்றவராகவே சுற்றித் திரிந் தார். ஆனால், மதத்தலைவர்களில் பெரும்பான்மையானோரும், கல்விமான்களும், அதிகாரிகளும், ஜனங்களில் அதிகப்படியானோரும் அவருடைய உபதேசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஜனங்கள் நன்மைகளை பெற ஆயத் தமாக இருந்தார்கள். தங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை காண ஆய த்தமாக இருந்தார்கள். ஆனால் மனம்திரும்புவதற்கோ ஆயத்தமாக இருக்கவில்லை. அன்றும் இன்றும் மனிதர்கள், தாங்கள் எதிர்பார்க் கும் காரியங்களையும், இந்த உலக போக்கின்படி தாங்கள் வாழும் வாழ்வின் வழிமுறைகளுக்கு ஏற்புடையதும், தங்கள் பாரம்பரித்திற்கு ஒத்ததுமான உபதேசங்களையே கேட்க விரும்புகின்றார்கள். அதனால் என்ன, நாங்கள் நற்கிரியைகளை செய்வதை விட்டுவிட முடியுமோ? இந்த உலக கேட்டிற்கு உடைந்தையாகவுள்ள வழிகளை சரி என்று கூற முடியுமோ? இல்லை அப்படி வாழமுடியாது. நித்திய வாழ்வடையும் வழியை பெரும்பான்மையானோரும், பெருங் குடிமக்களும் ஏற் றுக் கொள்ள மறுப்பதினால் நாங்கள் அறிந்த சத்தியத்தை அறிவிப் பதை நிறுத்திவிட முடியாது. இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். கர்த்தராகிய இயேசு பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் ஜனங்கள் அவரை ஏற்றுக் கொள்ளவி ல்லை. எனினும், இயேசுதாமே நன்மை செய்வதிலிருந்து ஓய்ந்து போகவில்லை. சிலுவை மரணம் வரைக்கும் பிதாவினுடைய சித்தத்தை தன் வாழ்வில் நிறைவேற்றி முடித்தார். இயேசுவைப் போல நாங்களும் நன்மை செய்வதில் சோர்ந்து போகாதிருப்போம்.

ஜெபம்:

நன்மைகளின் ஊற்றாகிய தேவனே, நிந்தனைகள் அவமானங்கள் மத்தியிலும் இயேசு நன்மையை நிறைவேற்றியதைப் போல, நானும் என் வாழ்வில் நன்மையை நிறைவேற்றி முடிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 5:41-43