புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 10, 2019)

பரம தந்தையிடம் செல்வோம்

லூக்கா 15:20

எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான்


தன் தந்தையிடம் தனக்கிருந்த சொத்துக்கள் யாவையும் எடுத்துக் கொண்டு, தந்தையைவிட்டுத் தூரமாகச் சென்று, துன்மார்க்க வழிக ளிலே தன் ஆஸ்திகளையெல்லாம் அழித்துப் போட்ட இளைய குமார னாகிய “கெட்ட குமாரன்” என்னும் உவமையை நாங்கள் அறிந்திருக்கின்றோம். அவன் ஒன்றுமில்லாதவனாய், யாருமில்லாதவனாய் தனி த்து விடப்பட்டிருக்கையில், தனக்கிருந்த எல்லா சலுகைகளையும் நான் இழந்து போனேன் என்று தன் மன திலே எண்ணினான். தனக்கு உரித்தான ஆசீர்வாதங்கள் யாவையும் தந்தை என் னிடம் தந்தார், ஆனால் நான் அவை யாவையும் முற்றாக அழித்துப் போட் டேன், இனி தந்தை வீட்டில் எனக்கு பங்கும் இல்லை பாகமும் இல்லை, இனி குமாரன் என்று அழைக் கப்படும் தகுதியும் எனக்கில்லை, எனினும் தந்தை இரக்கமுள்ளவராக இருப்பதால், என்னை தன்னுடைய ஊழியர்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்வார் என்று அவன் நினைத்திருந்தான். அவன் தன் தந்தை வீட்டை நோக்கி புறப்பட்டு போனான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனு டைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். இளைய குமாரன் தன் பாவங்களையும் தன் பழைய வாழ்க்கையையும் குறித்து மனவருத்த மடைந்திருந்தான். ஆனால், தந்தையோ பழையவைகளை இனி எண் ணாமல், தன்னிடம் திரும்பி வந்திருக்கும், தன் குமாரனைக் குறித்து வெகுவாய் சந்தோஷமடைந்தார். குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று தன் மனந்திரும்புதலை தந்தைக்கு தெரி யப்படுத்தினான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம் என்றார். மனந்திரும்புகின்ற இருதயத் தோடு தன்னிடம் சேருகின்றவர்களை ஒருபோதும் புறம்பே தள்ளாத பரம தந்தை எங்களுக்கு இருக்கின்றார். எனவே தாமதமின்றி எழுந்து புறப்பட்டு தந்தையிடம் விரைந்து செல்வோம்.

ஜெபம்:

மனதுருக்கமுடைய தேவனே, துரோகம் செய்துவிட்டேன் என்று என் வாழ்வை நானே அழித்துக் கொள்ளாமல், மனம்திரும்பி உம்மிடமாய் கிட்டிச் சேரும் உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 1:18-19