புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 28, 2019)

தேவன் நியமித்த வழி...

2 தீமோத்தேயு 2:5

மேலும் ஒருவன் மல்யுத்தம் பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.


ஓலிம்பிக் அஞ்சல் ஓட்டப்போட்டியில் (Relay Race) சிறப்பாக ஓடி மூன்றாம் இடத்தை பெற்ற குழுவினரில் ஒருவர், தான் ஓட வேண்டிய வரிசையை தவறி, மற்றய பாதையில் சில அடிகளை வைத்ததால், அந்தக் குழுவினர், அந்த போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்கள். இந்த உலகிலே நடைபெறும் “விளையாட்டுக்கள்” கூட சட்டப்படி செய்யப்படாவிடின் ஒருவனும் பரிசு பெறுவதில்லை என்ற கோட்பாடு அமுலில் இருக்கின்றது. முறைப்படி மல்யுத்தம் செய்து வெற்றி பெறுபவன் முடிசூடப் படுவதற்கு தகுதியுள்ளவனாக இருக்கின்றான். ஒருவேளை, இந்த உலகிலே, சில மனிதர்கள், ஒழுங்கு முறைகளை மீறி தாங்கள் அடைய நினைக்கும் காரி யத்தை செய்து முடிக்கலாம். ஆனால், எவரும், பரலோகத்திலே வீற்றிருக்கும், உன்னதமான தேவனுக்கு மறைவாக எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. ஒருவரும் நாற்றுக்களை நட்டுவிட்டு நிலத்தை உழுவதில்லை. வீட்டைக் கட்டிவிட்டு அத்திவாரம் போடுவதில்லை. நித்திய ஜீவனை பெற அழைக்கப்பட்டிருக்கும் நாங்கள், தேவன் நியமித்த ஒழுங்கின்படியே யாவற்றையும் செய்ய வேண்டும். தேவனுடைய வார்த்தையை கேட்டு அதன்படி தன் வாழ்வை வாழ்பவன், கன்மலையின் மேல் தன்வீட்டை கட்டின மனுஷனுக்கு ஒப்பிடப்படுகின்றான். நீ விசுவாசித்தால் மகிமையைக் காண்பாய் என்று இயேசு சொன்னார். அப்படியாக அவருடைய வார்த்தைகளை விசுவசித்தவர்கள் தேவ மகிமையை கண்டடைந்தார்கள், இன்றும் காண்கின்றார்கள். ஆனால் சில மனிதர்களோ, தேவனே நீர் மகிமையை காட்டும் அப்போது நாம் விசுவாசிப்போம் என்கின்றார்கள். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும்படி ஒழுங்கு முறைகளை கண்ணியமாக கடைப்பிடிக்கின்றார்கள். ஆனால் நித்திய வாழ்வை அடைவதற்கு குறுக்கு வழிகள் ஏதும் உண்டா என தேடுகின்றார்கள். பரலோகம் செல்ல ஒரே வழி, ஒரே பாதை, ஒரே வாசல் உண்டு. அந்த வாசல் கர்த்தாரகிய இயேசு கிறிஸ்துவே. நித்திய வாழ்வை பெற வேண்டுமாயின், அந்த வழியிலே, அவர் நியமித்த ஒழுங்கின்படி முன்னேறிச் செல்வோம்.

ஜெபம்:

அன்பின் பிதாவே, பரலோகம் செல்ல நீர் நியமித்த ஒழுங்கின்படி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து காட்டிய வழியாக செல்லும்படி, பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து என்னை நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 9:24-27