புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 18, 2019)

ஐசுவரியவான்களின் தானதர்மம்

மத்தேயு 6:4

அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.


ஒரு கிராமம் ஒன்றிலே, பல ஆண்டுகளாக, ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தினால் இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டு வந்தது. அந்த சேவையினால், அந்த கிராமத்தில் பயன் பெறாத மனிதர்கள்வரும் இல்லை. எனினும், கிராமத்திற்கு அப்புறமாக வாழ்ந்து வந்த ஐசுவரியமுள்ள மனிதன், அந்த மருத்துவ சேவைக்கு அந்நியனாகவே இருந்து வந்தான். ஒரு நாள் கூட மருத்துவ சேவையை பெற்றுக் கொள்ளவில்லை. இதனால், அந்த மனி தனை ஊரார் அந்நியனாகவே கருதி வந்தார்கள். அவன் பணத்தினால், பெரு மைபிடித்தவன் என பேசிக் கொண்டார்கள். பல ஆண்டுகளுக்கு பின், அந்த ஐசுவரியவான் மரித்துப் போனான். அவனுடைய மரண ஆராதனையிலே, அந்த கிராமத்தின் அதிகாரி பேசுகையில், இந்த கிராமத்தில், நாங்கள் அருந்தி வரும் நல்ல தண்ணீர் வழங்கும் திட்டத்திற்கும், இலவச மருத்துவ சேவைக்கும், நாங்கள் நடக்கும் வீதிகளுக்கும், இந்த மனிததே காரணம் எனக் கூறினார். மேலும் அவர் உரையாற்றுகையில், இரக்கம் நிறைந்த இந்த மனிதன், தான் செய்யும் சேவையை பற்றி ஒருவரும் பேசுவதை சற்றும் விரும்பவில்லை என்றும் கூறினார். ஆம் பிரியமானவர்களே, பொதுவாக ஜனங்கள் ஐசுவரியமுள்ளவர்களைக் குறித்து விமர்சிப்பதுண்டு. பணத்தின் ஆசை எல்லாத் தீமைக்கும் வேர் என்பது உண்மை! பணம் அல்ல, பணத்தை குறித்த ஆசையே தீமைக்கு வேர். அப்படிப் பண ஆசையுள்ள ஐசுவரியவான்கள், தானதர்மங்களைச் செய்தாலும், மனிதர்கள் காணவேண்டும் என்றும், தங்கள் வியாபாரத்திற்கு, அல்லது அந்தஸ்துக்கு மேன்மை வரும் என்றே செய்வார்கள். ஆனால், எல்லா ஐசுவரியவான்களும் அப்படிப்பட்டவர்கள் அல்லர். இயேசுவுக்கு இரகசிய சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த, அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு என்பவனே, கர்த்தரின் திருவுடலை அடக்கம் செய்தான். தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் இயேசுவுக்கு சீஷராக இருந்தார்கள். எனவே எவரையும் நியாந்தீர்க்காமல், மனுஷர் காணவேண்டுமென்று தானதர்மங்களை செய்யாமல், அந்தரங்கத்திலிருக்கின்ற பிதா மகிமையடையும்படியாய் தானதர்மங்களைச் செய்வோம்.

ஜெபம்:

பரலோக தேவனே, என்னுடைய பெயர் புகழுக்காக மனிதர்கள் காணும்படி தானதர்மங்களைச் செய்யாமல், உம்முடைய நாம மகிமைக்காகவே அவைகளை செய்ய என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 27:57