புதிய நாளுக்குள்..

தியானம் (தை 17, 2019)

படுகுழிகள்

நீதிமொழிகள் 4:26

உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழி களெல்லாம் நிலைவரப் பட்டிருப்பதாக.


படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும் என்ற நீதிமொழியை பலர் அடிக்கடி கூறுவதுண்டு. இதற்கு உதாரணமாக, பரிசுத்த வேதா கமத்திலே, ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாண்ட நாட்களில் வாழ்ந்த ஆமான் என்னும் தேசாதிபதியை கூறிக் கொள்வோம். மொர்தகாய் என்னும் யூதனையும், ராஜ்யத்தில் வாழ்ந்த யூத ஜனங்கள் யாவ ரையும் கொன்று போடும்படி சதி செய் தான். மொர்தகாயை தூக்கிலிடும்படி ஒரு தூக்கு மரத்தை செய்வித்தான், ஈற்றிலே, அகாஸ்வேரு ராஜா, ஆமானை, அவன் செய்த தூக்கு மர த்திலேயே தூக்கிலிட்டான். உபாய தந்திரங்களை பற்றி பேசும் போது, எப்போதும் மற்றவர்கள் செய்யும் சதி களை பற்றியே நாங்கள் அதிகமாக நினைப்பதுண்டு. ஆனால் நாங்கள் எங்கள் வாழ்க்கையையும் அவ்வ ப்போது, தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்திலே ஆராய்ந்து பார்க்க வேண்டும். சாலமோன் ராஜா பெரிய ஞானியாக இருந்த போதிலும், தன் வாழ்விலே, ஆரம்ப நாட்களிலே ஒரு குழியை வெட்ட ஆரம்பித்தான். அதாவது, தேவனை அறியாத ஸ்திரிகளை விவாகம்பண்ண முடிவெடுத்தான். அந்தக் குழி அவனுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. முடிவிலே தான் வெட்டின குழிக்குள்ளே அவன் விழுந்து போனான். தேவனுக்கு எதிராக பாவம் செய்தான். இப்படியாக, தேவனுடைய வார்த்தைகளுக்கு எதிராக எங்கள் வாழ்க்கையிலும் சிறிய குழிகள் இருக்கலாம். கோபம், வன்மம், பகை அல்லது மாம்சத்தின் கிரியைகள். இவைகளை பாராமுகமாக விட்டு விடும்போது, காலப்போக்கில், எங்களை விழுத்தும் குழியாக அவை மாறிவிடுகின்றது. சிலர் துணிகரமாக, மற்றவர்களுக்கு குழிகளை வெட்டி, முடிவிலே தாங்களே அதற்குள் விழுகின்றார்கள். ஆனால், இன்னும் சில மனிதர்கள், தங்கள் வாழ்க்கையிலிருக்கும் மாம்சத்தின் கிரியைகளை அனல்மூட்டி எரியவிடுவதினால், அவை, அவர்களின் வாழ்க்கையிலே பயங்கரமான குழிகளாக மாறிவிடுகின்றது. எனவே எங்கள் நடையை நாங்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாமல், எங்கள் கால்களை எல்லாத் தீமையான காரியங்களுக்கும் விலக்கி காக்க வேண்டும்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள பிதாவே, எங்கள் வாழ்க்கையில் உமது வச னத்திற்கு எதிராக இருக்கும் காரியங்கள் யாவையும் விட்டுவிடும்படி யான உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 4:20-27