புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 28, 2018)

கேட்க்கும் செவிகள்

சங்கீதம் 32:8

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல் லுவேன்.


நித்திய வாழ்வுக்குரிய வழியையும், இந்த பூமியில் வாழும்வரை எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்பதை பற்றியும் இயேசு விபரித்து கூறியிருக்கின்றார். சில சந்தர்ப்பங்களிலே, இயேசு தாமே “கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்று கூறியிருக்கின்றார். ஏனெனில் ஜனங்களில், ஒரு சாரார், எப்பொழுதும் தங்கள் செவியை தேவ வார்த்தைகளுக்கு அடைத்துக் கொள்கின்றார்கள். தங்கள் இருதய த்தில் தேவனுடைய வார்த்தை பலன் கொடுக்காதபடிக்கு, அதை கடினப்படு த்திக் கொள்கின்றார்கள். எசேக்கியல் தீர்க்கதரிசியின் நாட்களிலே, தேவன் தாமே, எசேக்கியலை நோக்கி: மனுபுத் திரனே, நீ கலகவீட்டாரின் நடுவிலே தங்கியிருக்கிறாய்; காணும்படிக்கு அவ ர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படி க்கு அவர்களுக்குக் காதுகள் இருந் தாலும் கேளாமற்போகிறார்கள்; அவர் கள் கலகவீட்டார் என்று கூறினார். பிரியமானவர்களே, காலத்திற்கு காலம், நாங்கள் எங்கள் நன்மைக்காக, எங்கள் வழிகளை சீர்தூக்கி பார்க்க வேண்டும். தேவனாலே தெரிந்து கொள்ளப்பட்ட, அவருடைய சொந்த பிள்ளைகளாகிய எங்களுக்கு, எங்கள் பிதாவாகிய தேவன், நடக்க வேண்டிய பாதையை காட்டுகின்றார். எங்களுக்கு எப்போதும் தகுந்த ஆலோசனைகளைத் தருகின்றார். எங்கள் செவிகளோ, அவ ற்றை தீவிரமாக கேட்டு கைக்கொள்வதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். “வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொ ழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.” என்று வேதத் திலே வாசிக்கின்றோம். நாங்கள் எங்களை அறியாமலே, உணர்வற்ற நிலையை அடையாதபடிக்கு, எப்போதும், தேவனுடைய சத்தத்திற்கு உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தை பலன் கொடுக்கும் நல்ல நிலமாக எங்கள் இருதயத்தை எப்போதும் எல்லா காவலோடும் காத்துக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

அன்பின் தேவனே, வேதத்திலுள்ள தேவ ஆலோசனைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிகின்ற இருதயத்தைத் தாரும். பலதரம் கேட்டும் உணர்வற்ற நிலையை அடைந்து போகாதபடிக்கு என்னை காத்துக் கொள்ளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எசேக்கியல் 12:2