புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 12, 2018)

சமாதானமும் சவுக்கியமும்

சங்கீதம் 122:7

உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.


எருசலேம் நகரத்தை சுற்றி இருந்த அலங்கம் அந்த நகரத்தின் அரணாக இருந்து வந்தது. அந்த அலங்கம், அந்த நகரத்தின் எல்லையாக இருந்தது. அந்த அலங்கத்தினால், எதிரிகள் இலகுவில் அந்த நகரத்தைக் கைப்பற்ற முடியாதிருந்தது. ஆனால், எதிரிகளுக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் அவர்கள் அந்த அரண்களை தகர்த்து, அலங்கங்களை இடித்து, பாதுகாப்பின் சுவர்களை தகர்த்துப் போடுவார்கள். அப்படி நடக்கும் போது, அங்கு வாழ்வதற்குரிய பாதுகாப்பை அவர்கள் இழந்து போகின்றார்கள், வாழ்க்கையும் வரையறையற்று போய்விடும். இதேபோலவே, தன் ஆவியை அடக்காத மனுஷனும் அப்படியே இரு க்கின்றான். அவனுடைய வாழ்க்கைக்கு வரையறை இல்லை. எப்படியும் வாழ் வோம் என்று எண்ணங்கொண்டவனாய், தன் வாழ்க்கையில் பல விதமான சவால்களும் பயங்கரங்களும் வருவதை பொருட்படுத்தாமல், அவைகளுக்கு இடங்கொடுக்கின்றான். தன் சரீரத்திற்காக அவன் உண்ணும் உணவையும், தன் ஆத்துமாவிற்காக அவன் உட்கொள்ளும் தேவனுடைய வார்த்தையாகிய ஆகாரத்தையும் குறித்தும் கருத்தற்றவனாக இருக்கின்றான். தன் சரீரத்தையோ, ஆத்துமாவையோ ஆளுகை செய்யாதவனாயுமிருக்கின்றான். ஆனால், தன் ஆவியை அடக்குகிறவன், பலமுள்ள அலங்கத்தை தன் பட்டணத்தை சுற்றி கட்டின மனிதனுக்கு ஒப்பாயிருக்கின்றான். தேவனுடைய வார்த்தையின்படி தன் இருதயத்தைக் காத்துக் கொள்கின்றவனுக்கு, தேவனே அலங்கமாயிருக்கின்றார். அவர் பலத்த துருகமா யிருக்கின்றார். நீதிமான் அதற்குள்ளே ஓடி சுகமாய் வாழ்ந்திருப்பான். தேவன் தம்முடையவர்களை சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து பாதுகாக்கின்றார். தேவன் விளம்பிய பரிசுத்த வேதாகமத்திலுள்ள ஜீவ வார்த்தைகளின்படி தன் வாழ்க்கையை நடத்துகின்றவன் தேவனுடைய அலங்கத்திற்குள் தங்குகின்றான். உன்னதமானவரின் உயர் மறைவில் அடைக்கலம் புகுந்து கொள்கின்றான். அங்கே அவனுக்கு சமாதானமும் சவுக்கியமும் உண்டாயிருக்கும்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, உம்முடைய வார்த்தையை கைக்கொள்ளுகின்றவர்கள், உம்மிலே சமாதானத்தையும் சுகத்தையும் கண்டடைகின்றார்கள். நான் உம் வார்த்தையின்படி வாழ என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சகரியா 2:5