புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 22, 2018)

வார்த்தையில் நிலைத்திருங்கள்

1 கொரிந்தியர் 16:13

விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.


தேவனுடைய சர்வாயுதவர்க்கம் தொட்டு உணரக்கூடியவைகள் அல்ல. உதாரணமாக, பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களை யெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள் என்று வேதம் கூறுகின்றது. இந்த விசுவாசமானது எங்கள் நாளாந்த வாழ்க்கையில், எங்கள் பேச் சில் மட்டுமல்ல கிரியைகளிலே காண் பிக்கப்பட வேண்டும். யோபு என்ற பக்தன், சாத்தானின் சோதனையால், தன்னிடத்திலிருந்த எல்லாவற்றையும் இழந்து போனான். உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் சாத்தான் அவனை வாதித்தான். அவன் ஒரு ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக் கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான். யோபுவின் மனைவி, அவன் தேவனிடத்தில் வைத்திருந்த விசுவாசத்திற்கெதிரான வார்த்தைகளை பேசி, உயிரை விடும்படி கூறினாள். அவனுக்கு ஆதரவளிக்க வந்த நண்பர்கள், நீர் பாவம் செய்திருக்கலாம் என்று அவனுக்கு எதிராக பேசினார்கள். ஆனால் யோபுவோ, தன் நேசரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்து போகிறது என்று விசுவாச அறிகையிட்டான். எங்களுடைய விசுவாசமும் யோவுவைப் போல இருக்க வேண்டும். எங்கள் விசுவாசத்தை கண்டு, எங்கள் குடும்பத்தார், நண்பர், உறவினர் கூட, இப்படி அளவுக்கதி கமாக தேவபற்றாக இருக்கத் தேவையில்லை. நடைமுறைச் சாத்திய மாக சிந்திக்க வேண்டும் என்று கூறலாம். ஆனால், அவை எல்லாவ ற்றிலும் நாங்கள் சோர்ந்து போகக்கூடாது. இப்படியாக தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியும் எந்த விடயத்திலும், யார் என்னதான் சொன்னாலும், இந்த உலகிலே எங்களுக்கு என்ன நடந்தாலும், நான் பரமன் இயேசுவோடு என்றுமே நிலைத்திருப்பேன் என்று நாங்கள் திடமனதாயிருக்கும் போது, தேவனுடைய ஆவியானவர் தாமே எங்களுக்குள் இருந்து எங்களை பெலப்படுத்தி வழிநடத்துவார்.

ஜெபம்:

பரலோக தேவனே, எந்த நிலையிலும், மனிதர்களுடைய மாம்ச கண்களால் காணமுடியாத உம்முடைய சர்வாயுதவர்க்கத்தை நான் தரித்தவனா(ளா)ய் நான் வாழ என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோபு 19:25-27