புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 12, 2018)

கர்த்தருடைய நியமங்கள்

2 நாளாகமம் 26:5

அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்.


யூதா ராஜாவாகிய அமத்சியா மரித்த பின், அவனுடைய 16 வயதுள்ள குமாரனாகிய உசியா அவன் ஸ்தானத்திலே ராஜாவானான் உசியா 52 வருடங்கள் எருசலேமிலே அரசாண்டான். அவன் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்து வந்தான். தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் ஆலோசனைப்படி தேவனைத் தேட மனதுள்ளவனாக இருந்தான். கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். அவன் ராஜ்யபாரம் மிகவும் பெலப்பட்டது. அவன் பலப்பட்டபோது,  தனக்குக்கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த் தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித் தான். பிரதான ஆசாரியனும், மற்றய ஆசாரியர்களும், உசியாவை நோக்கி: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல. தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டுவெளியேபோம்;. மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக இருக்காது என்றார்கள். அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடே கோபமாய்ப் பேசுகிறபோது ஆசாரியருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று. உசியா கர்த்தரை தேடின நாட்கள் எல்லாவற்றிலும் தேவன் அவனோடு கூட இருந்து அவனை அதிகமாக ஆசீர்வதித்தார். ஆனால் கர்த்தரின் நியமங்களுக்கு எதிர்த்து நிற்கும்படியாக துணிகரம் கொண்ட போதோ, தன்னுடைய மிகுதியான வாழ்நாட்களை குஷ்டரோகியாக கழித்தான். எங்களுடைய வாழ்க்கையிலும், நாங்கள் தேவனை தேடும்போது அவர் எங்களை ஆசீர்வதிக்கின்றார். ஆனால் நாங்கள் எந்த உயர்நிலையில் இருந்தாலும், தேவ நியமங்களுக்கு விரோதமாக மனமேட்டிமை அடை ந்து துணிகரம் கொள்ளக்கூடாது. தேவனுடைய சமுகத்தை அசட்டை செய்யாமல், அவர் பார்வைக்கு செம்மையானதை செய்யுங்கள். 

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, உம்முடைய நியமங்களுக்கு எதிராக நான் மனமேட்டிமை கொள்ளாதபடி,  உம்முடைய சமுகத்திலே என் னைத் தாழ்த்தி செம்மையான வழியிலே நடக்க கிருபை செய்வீராக.  இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - ஏரேமியா 9:23