புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 28, 2018)

நல்யோசனை செய்யுங்கள்

நீதிமொழிகள் 20:18

ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படு ம்;  நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு.


நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன் னைக் கைவிடுவதுமில்லை.  பலங்கொண்டு திடமனதாயிரு என்று தேவனாகிய கர்த்தர், யோசுவா என்னும் மனிதனை நோக்கி கூறினார். “நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை” என்று கர்த்தர் கூறிவிட் டார் என்று எண்ணி, யோசுவா தான் நினைத்தபடி யுத்தங்களை நடப்பிக்கவில்லை. அவர் மட்டுமல்ல, வேதத்திலே காணப்படும், பராக்கிரமசாலிகளாகிய தேவ பிள்ளைகள், தேவ ஆலோசனையை பெற்று, அதற்கு கீழ்ப்படிந்த போதெல்லாம், அவர்கள் எதிரிகளை மேற்கொண்டார்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்று கர்த்தராகிய இயேசு கூறியிருக்கின்றார். இதனால் அவர் எங்களுடன் இருக்கின்றார் என்று, நாங்கள் நினைத்தபடி எங்கள் எதிரியாகிய பிசாசானவனின் தந்திரங்களை மேற்கொள்ள முடியாது. ராஜாக்கள் அரசாண்ட நாட்களிலே, அவர்கள் யுத்தத்திற்கு செல்லுமுன், தேவனுடைய தீர்க்கதரிசிகளை அழைத்து, தேவனுடைய ஆலோசனை என்ன என்று கேட்பார்கள். ஏனெனில், அதுவே, அன்று தேவன் நியமித்த ஒழுங்கு. இன்றைய ஒழுங்கின்படி, தேவனுடைய வார்த்தைகள் பேசப்படும் போது, ஆர்வத்தோடே கேட்டு, அவைகளுக்கு கீழ்ப்படிந்து செயற் படும் போது, பிசாசின் எப்படிப்பட்ட தந்திரங்களையும் நாங்கள் எளிதாய் மேற்கொண்டுவிடுவோம். எல்லா யுத்தங்களும் என்னுடையது என்று எங்களுக்கு அடுத்த அலுவல்களில் தலையிட்டுக் கொள்ளாமல், எப்போதும் தேவ வழிநடத்தலுக்கு காத்திருக்கின்றவர்களாக எங்கள் வாழ்க்கையானது நாளுக்கு நாள் மாற்றப்பட வேண்டும்.

ஜெபம்:

ஜீவனுள்ள தேவனே, இந்த உலகிலே, நாங்கள் எதிர்நோக்கும் சவால்களை எங்கள் அறிவிற்கு எட்டியபடி கையாளாமல், உம்முடைய வார்த்தையின்படி நல்யோசனை செய்து மேற்கொள்ளும்படி எங்களை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:5