புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 13, 2018)

உன்னதத்திலுள்ள தேவனுக்கு...

மல்கியா 1:6

நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்க ளைக் கேட்கிறார்;.


எங்கள் தேவனாகிய கர்த்தர் மனிதனை சுயாதீனமாக படைத்து, தன்னை நேசிக்கும்படியோ, தன் கட்டளைகளை கைகொள்ளும்படியோ அவனை பலவந்தம் பண்ணாமல், நன்மையும் தீமையையும் அவன் முன்வைத்து, தீர்மானத்தை அவன் கையில் கொடுத்தார். நாங்கள் தேவனை ஆராதிக்க ஆலயத்திற்கு செல்வது எங்களுடைய தீர்மானம். அங்கே சென்று பயபக்தி யோடு தேவனை ஆராதிப்பது எங்களுடைய தீர்மானம். எனக்கு சுயாதீனம் உண்டு என்று சொல்லி நான் விரும்பிய பிரகாரமாய் தேவனை ஆராதிக்க முடியாது. இயேசுவின் அன்பான சீஷ னாகிய யோவான் இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்தவன், பத்முதீவிலே கர்த்தர் அவனுக்கு இனிநடக்கும் சம்பவங்களை வெளிப்படுத்திய போது, கர்த்தரை அவருடைய மகிமையிலே கண்ட போது, பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்த யோவான், கர்த்தருடைய பரிசுத்த பிரசன்னத்திலே நிற்க முடியாமல் செத்தவனைப் போல விழுந்தான். கர்த்தர் பரிசுத்தமுள்ளவர்! மகிமை, மாட்சிமை நிறைந்தவர் எனவே ஆராதிக்கும்போது அவரை அசட்டை பண்ணும் செயல்களுக்கு நீங்கள் உடன்படாதிருங்கள். கர்த்தருடைய  சமுகத்தில் சந்தோஷமுண்டு  ஆனால் அவை யாவும் பயபக்திக்கு அப்பாற்பட்டிருக்க முடியாது. உலகத்திலுள்ள எஜமான்களுக்கு முன்பாக நீங்கள் நினைத்தபிரகாரம் சமுகமளித்து, நீங்கள் நினைத்த காரியங்களை அவன் முன்னிலையில் செய்தால் அதை அவன் ஏற்றுக் கொள்வானா? எனவே கர்த்தர் தந்த சுயாதீனத்தை, உங்கள் இச்சைகளை நிறைவேற்ற பயன்படுத்தாதிருங்கள். கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள். 

ஜெபம்:

உன்னதமான தேவனே,  உம்மை அசட்டை பண்ணுகிறவனை நீர் அசட்டைபண்ணுவீர். நீர் தந்த சுயாதீனத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் பயபக்தியுடன் உம்மை சேவிக்க என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 4:3