தியானம் (ஆவணி 14, 2017)
‘யெகோவா நிசி’
யாத்திராகமம் 17:15
மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,
அமலேக்கியர், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களுடன் யுத்தத்திற்கு வந்தார்கள். மோசே என்ற தேவ மனிதன் யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான். யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கோடே யுத்தம் பண்ணினான். மோசே தன் கையை “ஏறெடுத்திரு க்கையில்”, இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் “தாழவிடுகையில்”, அமலேக்கு மேற்கொண்டான். மோசேயின்கைகள் அசர்ந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டு வந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது. இப்படியாக அன்று தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அமலேக்கியரை மேற்கொண்டார்கள். இது மோசேயின் கையின் வல்லமை அல்ல, அவன் வானத்திற்கு நேராக தேவனை நோக்கி தன் கரங்களை உயர்த்திய போது, வெற்றி பரலோகத்திலிருந்து வந்தது. எனவே மோசே அந்த இடத்திற்கு “கர்த்தர் எங்களுக்காக கொடி ஏற்றுவார்” அதாவது எங்கள் தேவன் வெற்றியை தருகின்றவர் என்ற அர்த்தம் கொள்ளும்படி “யெகோவா நிசி என்று பேரிட்டான். பிரியமானவர்களே, தேவனாகிய கர்த்தர் எப்போதும் ஜெயம் கொள்ளுகிற வராயிருக்கின்றார். நான் அவரை சார்ந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் ஒரு போதும் தோல்வி அடைவதில்லை. நான் வெற்றியடைய வேண்டும் என்றால், வெற்றி கொள்ளும் தேவனை சார்ந்து வாழ வேண்டும். அப்படி நான் தேவனை சாராமல் வாழ்ந்தால், என்னுடைய வாழ்க்கையை பிசாசானவன் மேற்கொள்ளுவான். அதாவது நான் என் ஆத்துமாவை கெடுத்து என் வாழ்க்கையை இழந்து படுதோல்வி அடைவேன். அப்படியாகாமல் இன்று வெற்றி தரும் யெகோவா நிசியை பற்றிக்கொள்வோம்.
ஜெபம்:
பரலோக தேவனே, என் வாழ்க்கையை வெற்றியடைய செய்கின்றவரே, உம்மை எப்போதும் சார்ந்து வாழ பிரகாச முள்ள மனக்கண்களைத் தாரும். இரட்சகர் இயேசு கிறிஸ்து வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்!
மாலைத் தியானம் - 1 யோவான் 5: 1-5