புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 25, 2020)

இலக்கின் மேல் கண்கள்

பிலிப்பியர் 3:14

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.


ஒரு கிராமத்திலே வாழ்ந்து வந்த மனிதன், தன் சரீரத்திலே ஏற்பட்ட சில பெலவீனங்களின் நிமித்தம். கிராமத்திலுள்ள பரிகாரியை காணு ம்படியாக சென்றிருந்தான். பரிகாரி, அவனுடைய உடல்நிலையை சோதித்துப் பார்த்தபின்பு, “கடந்த முறை நீ இங்கு வந்த போது, நான் உனக்கு கூறிய சுகாதார ஒழுங்கு முறைகளை கடைப்பிடித்தாயா? நான் உனக்கு கொடுத்த மருந்துகளை ஒழுங்காக எடுத்தாயா? ஏன் நீ என்னை சீக்கரமாய் வந்து சந்திக்கவில்லை” என்று சற்று கடினமான தொனியிலே அவனை கண்டித்துப் பேசிவிட்டார். பரிகாரி கூறிய விடயங்கள் உண்மையாக இருந்தாலும், அவர் பேசிய தொனியையிட்டு மிகவும் கோபமடை ந்தான். தன் சரீரத்திலே இருக்கும் நோயை குறித்தும், அதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தைக் குறித்தும் சிந்தனையில்லாமல், அந்த பரிகாரியின் பேச்சுத் தொனியைக் குறித்தே அதிகமாக அலட்டிக் கொண்டிருந்தான். அவனுடைய மனைவியோ அந்த மனிதனை ஆறுதல் படுத்தி, அந்தப் பரிகாரி சாந்தமாக பேசியிருந்தால் எல்லாம் நலமாக இருந்திருக்கும் ஆனால் எனக்கும் பிள்ளைகளுக்கும் பரிகாரியின் தொனியைக் குறித்த கரிசனையைவிட உங்கள் நோய் மாற வேண்டும் என்பதே எங்கள் எண்ணமும் ஏக்கமுமாயிருக்கின்றது. எனவே அவர் கொடுத்த மாத்திரைகளை சற்று உட்கொள்ளுங்கள் என்று தயவாக கேட்டுக் கொண்டாள். ஆம் பிரியமானவர்களே, பல வேளைகளிலே நாமும் காரியத்தின் கருப்பொருளை மறந்து, சூழ்நி லையைக் குறித்து அதிக கவனமுள்ளவர்களாக மாறிவிடுகின்றோம். இந்த உலகத்தின் பாவத்தை போக்குவதற்காக இயேசு கிறிஸ்து தம்மைத் தாமே பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டியது, பிதாவாகிய தேவனுடைய சித்தமாயிருந்தது. ஆனால், அதை நிறைவேற்றி முடிக்க இவ்வளவு அவமானத்தையும் நிந்தையான பேச்சுக்களையும் சகிக்க வேண்டுமா? ஆம், இயேசு அவை யாவற்றின் மத்தியிலும், பிதாவின் சித்தத்தை தன் வாழ்வில் நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்பதை தன் இலக்காக வைத்து, அதை சம்பூரணமாக நிறைவேற்றி முடித்தார். எனவே சூழ்நிலைகளினால் எங்கள் மனதைக் குழப்பிக் கொண்டு;, இழுப்புண்டு போகாமல், எங்கள் கண்களை எப்போதும்; இலக்கின் மேல் பதிய வைத்து, பொறுமையோடே ஓடக்கடவோம்.

ஜெபம்:

பரலோக தேவனே, இந்த உலகத்தில் உண்டாகும் அவமானங்கள் நிந்தையான பேச்சுக்களால் சோர்ந்து போகாமல், பரலோக இலக்கை நோக்கி என் பிரயாணத்தை தொடர என்னை பெலப்படுத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-4