புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 06, 2019)

புதிய இருதயத்தைத் தருவார்

எசேக்கியேல் 36:26

கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந் து எடுத்துப்போட்டு சதை யான இருதயத்தை உங் களுக்குக் கொடுப்பேன்.


வனாந்தர வழியாக சென்று கொண்டிருந்த தேவனுடைய ஜனங்களாகிய இஸ்ரவேலருக்கு தேவனாகிய கர்த்தரே சேனைகளின் அதிபதியாக இருந்தார். மோசே என்னும் மனிதன் தேவனுடைய வார்த்தையை ஜனங்களுக்கு அறிவித்து வந்தான். அந்நிய தேசத்து எதிரிகளால் வந்த மோசங்களிலிருந்து கர்த்தர் அவர்களைப் பாதுகாத்தார். கர்த்தர் யுத்தங்களை நடப்பித்தார். ஆனால் தங்கள் சொந்த வாழ்க்கையில் வந்த யுத்தங்களில் (போராட்ட ங்களில்) அவர்களால் வெற்றி கொள்ள முடியவில்லை. அதன் காரணம் என்ன? ஏனெனில் அவர்கள் மனதிலே நிலையற்றவர்களும் வழுவிப்போகின்ற இருதயம் உடையவர்களாகவும் இருந்தார்கள். கர்த்தருடைய வசனத்தை கேட் கும் போது சந்தோஷம் அடைவார்கள். கர்த்தருடைய அதிசய கிரியைகளைக் காணும் போது ஆடிப்பாடி ஸ்தோத்தரிப்பார்கள். ஆனால், நெருக்கங்கள் வாழ்க்கையில் சூழும் போது, தேவனுடைய வார்த்தையையும், வாக்குத்தத்தங்களையும், அவர் செய்த அதிசயமான செயல்களையும் மறந்து போய்விடுவார்கள். செங்கடல் அருகே வந்த போது, பார்வோனின் சேனை அவர்களை பின் தொடர்ந்து வந்தது. அவ்வேளையிலே மிகவும் கலக்கம் அடைந்தார் கள். ஆனால் கர்த்தரோ செங்கடலை பிளந்து, அதிலே பாதையை அமை த்தார். அதன் வழியாக கடந்து சென்று அக்கரை அடைந்தபின், ஆடிப்பாடினார்கள், ஆனால் மூன்று நாட்கள் கடந்த பின், குடிப்ப தற்கு தண்ணீர் இல்லை என்று கலகம் பண்ணினார்கள். தேவனோ அதி சயிக்கத்தக்க விதமாக தண்ணீரைக் கொடுத்தார். அப்போது திருப்த்தி யானார்கள். இப்படியாக தங்கள் இருதயங்களை எப்போதும் கடினப்ப டுத்திக் கொண்டிருந்தார்கள். இதுவே, மண்ணில்லாத கற்பாறை நில மாகிய இருதயம். அங்கே தேவனுடைய வார்த்தை ஆழமாக வேர் விடுவதற்கு இடமில்லை. பிரியமானவர்களே, நன்மைக்காகவே, தேவ வார்த்தையின் வெளிச்சத்தில் எங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பார் க்க வேண்டும். இருதய கடினம் இருக்கும் இடத்தில் முறுமுறுப்புக்க ளும் கலகங்களும் இருக்கும். இன்று தேவனுடைய சத்தத்திற்கு செவி சாய்ப்போமாக. அப்போது எங்கள் உள்ளத்திலே தேவனானவர் புதி தான ஆவியைக் கட்டளையிட்டு நவமான இருதயத்தைக் கொடுப்பார்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, நிலையற்ற வழுவிப்போகும் கல்லான இருதயத்தை நானே எனக்குள் உண்டு பண்ணாமலிருக்க, உம்முடைய தூய ஆவியினாலே என் இருதயத்தை எப்போதும் புதிப்பித்து நடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 95:8