புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 01, 2019)

தேவ மாளிகை

1 கொரிந்தியர் 3:9

நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.


இந்த உலகிலே ஓட்டப் பந்தையத்திலே ஓடுகின்றவர்கள், தங்கள் மாம்ச கண்களால் காணும் இலக்கை நோக்கி ஓடுகின்றார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு கிடைக்கும் பதக்கம் என்ன என்பதையும், ரொக்கப் பணம் எவ்வளவு பெறுமதியுடையதென்பதையும் அறிந்திருக்கின்றார் கள். நாங்களோ விசுவாசக் கண்களால் மாத்திரம் காணக்கூடிய, பரலோகத்தை நோக்கி ஓடுகின்றோம். வெற்றி பெறுகின்றவர்களுக்கு கிடைக்கும் கைமாறு ஈடு இணைய ற்றது என பரிசுத்த வேதாகமம் கூறு கின்றது. ஆனால் அந்த இணையில் லாத பரிசுப் பொருளின் மகிமையை மனிதனுடைய மொழியினால் வர்ணி க்க முடியாது. சென்றடைய வேண்டிய இலக்கை ஒருவரும் தங்கள் மாம்ச கண்களால் காண முடியாது. எனவே, இதைக் குறித்து விசுவாசமற்றவர்கள், இந்த பரம பந்தையப் பொருளின் அழைப்பை அசட்டை செய்கின்றார்கள். இந்த இரகசியம் உலகத்தாருக்கு பைத்தியமாக தோன்றுகின்றது. நெகேமியா என்னும் தேவ ஊழியருடைய நாட்களிலே, எருசலேமின் அலங்கத்தை கட்டும் வேளையிலே, தோபியா சன்பல்லாத்து என்பவர்கள், யூத ஜனங் களுக்கு பெரும் இடறலாக இருந்தார்கள். ஜனங்கள் சிறையிருப்பிலி ருந்து திரும்பி, நன்மையான காரியத்தை செய்யும்படி கட்டுமானப் பணியை ஆரம்பித்தபோது, அவர்கள் கேடு செய்ய முனைந்தார்கள். கட்டுகின்றவர்கள் சோர்ந்து போகும்படியாய், அவர்களைப் பார்த்து நகைத்தார்கள். அந்த வேளையிலும், நெகேமியாவும், அவருடன் சேர் ந்த ஜனங்களும், தங்களை நகைக்கின்றவர்களின் வார்த்தைகளை ஒரு பொருட்டென்று எண்ணாமல், தாங்கள் செய்ய வேண்டிய வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். நாங்களும் தேவனுடைய ஆவிக்குரிய மாளிகைகளாக கூட்டிக் கட்டப்பட்டு வருகின்றோம். பலர் உங்களை நகைக்கலாம் அல்லது பகைக்கலாம். உங்கள் விசுவாசம் தளர்ந்து போகும்படியான வார்த்தைகளை பேசலாம். நெகேமியாவை யும் அவரோடு இருந்தவர்களையும் போல, நீங்களும் உங்கள் விசுவா சத்தில் உறுதியாக நில்லுங்கள். உலகத்தாரின் வீண் பேச்சுகளுக்கு இடங்கொடாமல், கர்த்தருடைய நாளிலே, கறையற்றவர்களும் பிழை யில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படு ம்படி ஜாக்கிரதையாயிருங்கள்.

ஜெபம்:

அன்புள்ள பிதாவாகிய தேவனே, காண்கின்ற உலகத்தில் மாயையான வாழ்க்கையில் சிக்கிக் கொள்ளாதபடி, கண்ணிகளுக்கு தப்பி, ஜீவ ஓட்டத்தை ஓடி முடிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நெகேமியா 4:1-23