புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 27, 2019)

விதைப்பும் அறுப்பும்

கலாத்தியர் 6:9

நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.


மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் என்ற வார் த்தைக்கு அமைய, பரலோக மேன்மைக்கானவைகளை விதைக்கின்றவன் பரலோகத்திலே மேன்மையை கண்டடைவான், தன் மாம்ச விருப்பத்தின்படி இந்த பூவுலகின் அநித்தியமான ஆசைகளுக்காக விதைக்கின்றவன் இப் பூவுலகோடு அழிந்து போகின்றவைகளை அறுப்பான். ஆனால், அங்கும் இல்லை இங்கும் இல்லை என்றிருப்பவனின் வாழ்க்கை பரிதாபம். அவன் எதையும் விதைப்பதில்லை, அவன் சோம்பேறியானவனும், சாட்டுப் போக்கு சொல்கின்றவனுமாயிருப்பான். தன்னுடைய எஜமானிடமிருந்து ஒரு தாலாந்தை பெற்ற சோம்பேறியான வேலைக்காரன், எஜமான் வரும்வரை அதைப் பயன்படுத்தி பெருக்க மனதில்லாதவனாய், அதைப் அப்படியே மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்தான். எஜமானன் வந்தபோது அவன்மேல் கோபமடைந்து அவனுக்குரிய தண்டனையை வழங்கினார். காலநிலை, சூழ்நிலை, விலைவாசி எல்லாம் என்னுடைய எண்ணப்படி, எனக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே நான் விதைகளை விதைப்பேன் என்று ஒரு விவசாயி கூறுவானாக இருந்தால், அவன் ஒருபோதும் விதைகளை விதைக்கப்போவதுமில்லை, ஆதலால், அவன் எதையும் அறுவடை செய்யப் போவதுமில்லை. “மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன். மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக, நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.” தேவ மனிதன் பவுல் வழியாக எங்களுக்கு அறிவுரை கூறப்பட்டிருக்கின்றது. எனவே எங்களுக்கு கொடுக்கப்பட்ட பெலத்தின்படி நன்மையை கண்டடையும்படியாய் நற்கிரியைகளை செய்வோம்.

ஜெபம்:

நன்மை செய்யும் தேவனே, பரலோகிலே நித்திய வாழ்வை அடையும்படிக்காய், நீர் விரும்பும் நற்கிரியைகளை இந்த உலகிலே நடப்பிக்க எனக்கு அருள் புரிவீராக! இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 25:14-30