புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 25, 2019)

அழியாத மேன்மையை நாடுவோம்

பிரசங்கி 12:14

ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டு வருவார்.


ஊரிலே வாழ்ந்த ஏழைகளுக்கு நாத்தார் நாட்களிலே உணவு வழங்க வேண்டும் என்று ஒரு மனிதன் மிக அதிகமாக பிரயாசப்பட்டான். அந்தக் கடினமாக திட்டம், கைகூடி வரும்போது, அங்கு வாழ்ந்த அதிகாரி ஒருவர், இடைப்பட்டு, இந்த திட்டத்திற்கு காரணகர்த்தா நான்தான் என்று உரிமை கோரிக்கொண்டார். அதைகண்டு அதிர்ச்சியடைந்த அந்த மனிதன், அன்றிரவு தேவ சமுகத்திலே தன்னுடைய மனதை ஊற்றி ஜெபித்தார். மறுநாள் காலையிலே, அவனுடைய மனம் மகிழ்ச்சியாக இருந்தது. ஏழை மக்கள் போஷிக்கப்படுகின்றார்கள் என்ற காரணத்தினால் அவன் சந்தோஷப்பட்டான். தாங்கள் செய்த குற்றத்தை மற்றவர்கள் மேல் போட்டு, தாங்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்கும்படி பொய் சாட்சிகளை ஏற்படுத்தும் மனிதர்கள் இந்த உலகிலே வாழ்கின்றார்கள். இன்னுமொரு சாரார், மற்றவர்கள் செய்யும் நன்மையான கிரியைகளுக்கு தாங்களே காரணகர்த்தாக்கள் என உரிமை கோரிக் கொள்கின்றார்கள். இவை இரண்டும் உண்மை வழி நடந்திடும் உத்தமர்களுக்கு மன வேதனையை உண்டு பண்ணாலாம். ஆனால், உன்னதத்திலே வாழும் தேவன் யாவற்றையும் அறிந்திருக்கின்றார். இந்த பூவுலகில் நீதிமான் படும் வேதனைக்கு முடிவு உண்டு, அது நித்தியமானது அல்ல. அதேபோல இந்த உலகிலே, துன்மார்க்கர் பெற்றிருக்கும் கீர்த்தியும் அழிந்து போகும். அவர்கள் கீர்த்தி அநித்தியமானாது. நீதியின் வழி நற்கிரியைகளை நடப்பிக்கும் தேவ பிள்ளைகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் நித்திய ஆசீர்வாதங்கள் ஒருகாலமும் அழிந்து போவதில்லை. அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார். தீமையிலே வாழ்பவர்கள் அதன் பின்விளைவை கண்டடைவார்கள். ஒருவரும் தப்பிப் போகமுடியாது. அதே போல, அந்தரங்கமான ஒவ்வொரு நற்கிரியைகளுக்கும் பரலோ கிலே கைமாறு மிகுதியாயிருக்கும். எனவே தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளின் வழியிலே நடப்போம்.

ஜெபம்:

நீதியின் தேவனே, இந்த உலகிலே நடக்கும் அநீதியை கண்டு மனந்தளர்ந்து போகாதபடிக்கு மேன்மையான நித்திய பரலோகத்தை வாஞ்சித்து அதன் வழியில் செல்ல என்னை வழிடத்திச் செல்லும். இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:6