புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 24, 2019)

ஓளி வீசும் தீபங்கள்

எபேசியர் 5:8

வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.


அயலிலே வாழ்ந்து வந்த பிறவிக் குருடனை பல மனிதர்கள் நகைத்து வந்தார்கள். வீணரான மனுஷர்கள் அந்த குருடனின் இயலாமையை ஏளனம் செய்வதே தங்கள் நாளாந்த பொழுது போக்காக்கிக் கொண்டார்கள். எனினும் ஊரிலே இருந்த ஒரு சில நீதிமான்கள், அந்த குருடனுக்கு எப்போதும் இரக்கம் காட்டி வந்தார்கள். குருடனை பார்த்து, நீ குழியில் விழாமல் நட என்று எத்தனை முறை கூறினாலும் அவர்கள் தங்கள் முன்னிருக்கும் ஆப த்தை கண்டு கொள்ள முடியாதவர் களாகவே இருக்கின்றார்கள். அதே போலவே, இந்த உலகிலே, இயேசுவை அறியாமல் அழிந்து போகின்ற ஆத்துமாக்களும் நித்தியத்தைக் குறித்து அவர்கள் மனம் குருடுபட்டிருப்பதால், தங்கள் முன்னிருக்கும் நித்திய மரணத்தைக் குறித்து உணர்வற்றவர்களாகவே வாழ்கின்றார்கள். எங்கள் சொந்த முயற்சியினாலே நாங்கள், நித்திய வாழ்வின் வழியாகிய இயேசுவை அறிந்து கொள்ளவில்லை. மாறாக, அது தேவனுடைய ஈவு. அந்த தேவ ஈவை பெற்ற நாம், மனக்கண்கள் குருடுபட்டிருக்கும் மற்றவர்களை கண்டு சினங் கொள்ளக் கூடாது. அவர்களின் வழிகளை கண்டு அவர்களை ஏளனம் செய்யக்கூடாது. மாறாக, அவர்களின் ஆத்துமாவைக் குறித்த பாரம் இருக்க வேண்டும். அவர்களோடு அன்பாக இருக்க வேண்டும் என்று கூறும் போது, நாங்களும் அவர்களைப் போல நடக்க வேண்டும் என்பது பொருள் அல்ல. அப்படி அவர்களைப் போல நடந்தால் நாங்கள் குருடரை வழிகாட்டும் குருடர்களாக மாறிவிடுவோம். தங்கள் வழிகளில் பெருமையுள்ள சில மனிதர்கள், உண்மை வழி எது என்பதை அறிந்தும், தங்கள் மனதை கடினப்படுத்துவதுடன், மற்றவர்களின் மனதையும் கெடுத்து விடுகின்றார்கள். இப்படிப்பட்ட மனிதர்களை தேவன் பார்த்துக் கொள்வார். ஆனால், உண்மை என்ன என்பதை அறியாமல் மாயையிலே மாழும் மனிதர்கள் அதிகதிகமாக இருக்கின்றார்கள். மெய்யான ஒளியாகிய இயேசுவை காண்பிக்கும் ஒளிவீசும் சுடர்களாக அழைக்கப்பட்ட நாங்கள், குருட்டாட்டத்திலே வாழும் மனிதர்களுக்கு எங்கள் சொல்லாலும் செயலாலும் தேவ அன்பை காண்பிக்க வேண் டும். அவர்களின் விடுதலைக்காக ஊக்கமாக ஜெபிக்க வேண்டும்.

ஜெபம்:

இரட்சிப்பின் தேவனே, நித்தியத்தின் வழியை அறியாமல், மனக் கண்கள் குருடுபட்டிருக்கும் ஜனங்கள், மெய்யான ஒளியை கண்டடையும் கருவியாக என்னை திகழச் செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - அப்போஸ் 26:18

Category Tags: