புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 21, 2019)

உலகத்தின் சுடர்கள்

2 தெச 3:13

அன்பின் பரலோக தந்தையே, உலகில் தீமை செய்கின்றவர்கள் இருக்கின்றார்கள் என்று நான் நன்மை செய்வதில் ஓய்ந்து போகாதி ருக்க என்னை நீர் வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்


இந்த அயலிலுள்ள ஜனங்களுக்கு ஆதரவு செய்தால், அவர்கள் அந்த உதவியை துஷ்பிரயோகம் செய்துவிடுவார்கள். அந்த ஸ்தாபனத்திற்கு உதவி செய்தால், அங்குள்ள தொண்டர்கள் சிலர், என் பணத்தை எடுத்துவிடக் கூடும். 25 வருடங்களுக்கு முன் நான் உதவி செய்த மனிதன், என்னை முற்றிலும் ஏமாற்றிவிட்டான். என்று எப்போதும் சாட்டுப் போக்கு சொல்லி, எதிரிடையான காரணங்களை தேடுபவர்கள் தாங்கள் உலகில்தான் வாழ்கின்றோம் என்பதை உணராதவர்களாக இருக்கின்றார்கள். இந்த உலகிலே தீமை மலிந்திருப்பது உண்மை. இருள் சூழ்ந்து கொண்டிருப்பதும் உண்மை. குற்றங்கள் குறைகள் நடப்பது சகஜம். அதனால் தான், உன்னதமான தேவன், என்னையும் உங்களையும் உண்மையுள்ளவர்கள் என்று கருதி, இருளின்; மத்தியிலே ஒளி வீசும் சுடர்களாக ஏற்படுத்தியிருக்கின்றார். காரியம் அப்படியாக இருக்கும் போது, வெளியிலே காரிருள் அதிகம் என்று கூறி, சுடர் வீசும் விளக்காகிய எங்களை நாங்களே, மரக்காலால் மூடி மறைத்து விடுவோம் என்றால் யார் ஒளி வீசுவார்கள்? ஒரு தோட்டத்திலே விவசாயி ஒருவன் நல்ல விதைகளை விதைத்திருக்க, யாவரும் உறங்கும் போது, எதிராளியானவன் அங்கே களைகளையும் விதைத்து விட்டான். களைகள் இருக்கின்றதே என்று சொல்லி, நீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட்டால், நல்ல நாற்றுக்களும் வெயிலில் கருகிவிடும். விவசாயி ஊற்றும் தண்ணீரை களைக ளும் உள்ளெடுத்துக் கொள்ளும், அதனால் நாங்கள் தண்ணீர் துஷ்பிரயோகம் பண்ணப்படுகின்றது என முற்றாக நிறுத்திவிடமுடியாது. எனவே, உதவிகளை நிறுத்துவதற்கு குறைகளை தேடாமல், உதவிகளை செய்வதற்கு சிறந்த வழிகளை தேட வேண்டும். இந்த உல கிலே உள்ள நன்மைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களை நாங்கள் ஏதும் செய்ய முடியாது. நீதி செய்கின்றவன் அநீதி நடக்கும் இடத்திலும் நீதியாக வாழ கற்றுக் கொள்வான். அநீதி நிறைந்தவன், நீதியுள்ள இடத்திலும், அநீதியானவைகளை நடத்த முயற்சிப்பான். எனவே, உலகிலே நடக்கும் துர்கிரியைகளை கண்டு, நாங்கள் பின் வாங்கிப் போனால், உப்பு தன் சாரத்தை இழந்ததிற்கு ஒத்ததாக இருக்கும். அதன் பின் அதை வெளியே கொட்டுவதற்கும் மிதிப்பதற்குமே ஏற்ற தாயிருக்கும். எனவே சோர்ந்து போகாமல் நன்மை செய்வோம்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, உலகில் தீமை செய்கின்றவர்கள் இருக்கின்றார்கள் என்று நான் நன்மை செய்வதில் ஓய்ந்து போகாதிருக்க என்னை நீர் வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - மத்தேயு 5:13