புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 20, 2019)

கர்த்தருக்கேற்ற போதனையில்...

எபேசியர் 6:4

பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.


நாளைய சமையலுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து, தன் சின்ன மகனோடு, வீடு திரும்பும் தாயார், பல பொருட்களை, இரண்டு கைகளிலும் தூக்கிக் கொண்டு சென்றாள். “நானும் எதையாகிலும் தூக்குகின்றேன் அம்மா” என்று கூறிய மகனிடம், அவனுடைய பிஞ்சுக் கைகள் தாங்காது, பூத்துப் போய்விடும் என்பதால், அவன் மனத்திருப்த்திக்காக, மிகவும் பாரம் குறைந்ததும், விழுந்தால் உடை ந்து போகாதுமான பொருள் ஒன்றை கொடுத்தாள். இதற்கொத்ததாகவே பல விடயங்களிலே, சிறார்களை இலகுவாக நடத்திச் செல்கின்றோம். ஏன் அப்படி செய்கின்றோம் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். சுமக்கக் கூடாத பாரத்தை, அந்த சிறுவனிடம் கொடுப்பது சரியாகுமா? இல்லை! மனிதனுக்கு மனிதன் ஆளுமையின் வளர்ச்சியில் வேறுபட்டிருப்பதைப் போல, சிறுவர்களும் ஒருவருக்கு ஒருவர் வேறுபட்டிருக்கின்றார்கள். அவர்கள் வளர்ந்து வரும் போது, எல்லோரும் போதகராகும்படி அழைக்கப்படவில்லை. எல்லோரும் வைத்தியராகிவிடுவதில்லை. ஒவ்வொரு பிள்ளைகளையும் தேவன் நேசிக்கின்றார். ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தனித்துவமான அழகான திட்டத்தை வைத்திருக்கின்றார். எனவே, சிறுவர்கள் நன்றாக கற்று, மனித தயவிலே வளரும்படியாய் அவர்களை அன்புடன் ஊக்குவிக்க வேண்டும். சிட்சிக்கப்பட வேண்டிய இடத்தில் சிட்சிக்கப்பட வேண்டும். ஆனால் சின்னவயதிலேயே தேவனுடைய அன்பையும் பரிசுத்தத்தையும் குறித்து கசப்பான எண்ணம் கொள்ளும்படியாய் அவர்கள் மேல், அவர்களுடைய பெலத்திற்கு மிஞ்சின காரியங்களை பெரியோர் திணித்துவிடக்கூடாது. அவர்கள் உங்கள் சிட்சைக்கு உட்பட்டவர்களாயிருந்தால், அவர்கள் உங்கள் அன்புக்கு அதிக பாத்திரராயிருக்கின்றார்கள். எங்களுடைய எதிர்பார்ப்புக்கள் அவர்களின் வளர்ச்சியின் அளவுகோலாக இருக்காமல், அவர்களுடைய நிலையை நன்றாக உணர்ந்து, அவர்களை கோபப்படுத்தாமல், அன்போடு அவர்களை, கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையில் வழிநடத்துங்கள்.

ஜெபம்:

அன்புள்ள பரலோக தந்தையே, சிறுவர்களை உம்மிடம் வருவதற்கு நாங்கள் தடையாக இருக்காதபடி, அன்போடும் பொறுமையோடும் உமக்கேற்றபடி அவர்களை வழிநடத்த ஞானத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோ 3:21