புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 17, 2019)

இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர்கள்

மத்தேயு 5:7

இரக்கமுள்ளவர்கள் பாக் கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.


ஒரு ஊரிலே பிச்சையெடுத்து வந்த மனிதன் ஒருவன், ஒவ்வொரு தெருவாக செல்லும் போது, குறிப்பாக ஒரு சில வீடுகளுக்கு தவறாமல் சென்று பிச்சை கேட்பான். அந்த வீடுகளில் வாழ்ந்த யாவரும் செல்லவந்தர்கள் அல்ல, அவர்களில் பலர் தங்கள் மாதாந்த ஊதியத்தில் தங்கி வாழ்ந்து வந்தார்கள். ஆனால், அந்த பிச்சைக்காரன், சில செல்வந்தர்களின் வீடுகளை கடந்து, குறிப்பிட்ட அந்த வீடுகளு க்கு சென்று வருவான், ஏனெனில், தனக்கு அவர்கள் தருவார்கள் என்ற நம் பிக்கை அந்த பிச்சைக்காரனிடம் இருந்தது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து, மற்றய மனிதர்களை குறித்து நியாயந்தீர்ப்பதை விட்டுவிடுவோம். இந்த சம்பவத்தின் கருப்பொருளாவது, எங்கே இரக்கம் உண்டோ அவர்களை நாடித் தேடி பல மனிதர்கள் வருவார்கள். சற்று எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை சிந்தித்துப் பார்ப்போம். எத்தனை ஆண்டுகளாக, அன்பின் தெய்வமாகிய இயேசுவை அறிந்திருகின்றோம். எத்தனை தடவைகள், சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் கருணையின் சிகரமாகிய அவரை மறந்து போனோம். அப்படியாக இருந்தாலும், நெருக்கங்கள் சூழும்போதும், வழி தெரியாதிருக்கும் போதும், மறுபடியும் மாறாத தெய்வமாகிய இயேசுவிடம் சென்று, இரக்கத்தை பெற்றுக் கொள்கின்றோம். அதே போல, உங்களை நாடி வருகின்றவர்களுக்கும் உங்கள் இரக்கத்தை தாராளமாக அள்ளி வழங்குங்கள். உங்களிடம் இருக்கும் ஆகாரத்தை பங்கிட்டுக்கொடுங்கள். பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது. மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும், அதேபோல, உங்களிடம் இருக்கும் நற்கிரியைகளை மற்றவர்கள் மேல் பொழியுங்கள். நற்கிரியை என்று சொல்லும் போது, பொருள் உதவியை மட்டும் எண்ணிக் கொள்ளாமல், தேவன் எங்களுக்கு தாராளமாகத் தரும் மன்னிப்பை மற்றவர்களுடன் தாராளமாக பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கள் இரக்கத்தை மற்றவர்களுக்கு வெளிக்காட்ட பல வழிகள் உண்டு. இரக்கத்தை காட்ட கிடைக்கும் சந்தர்ப்பங்கள் பாக்கியமுள்ளவைகள், எனவே உற்சாகத்துடன் உங்கள் இரக்கத்தை காண்பியுங்கள்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, நீர் இரக்கத்தில் ஐசுவரியம் உள்ள தேவன், உம்முடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. நான் பெற்ற இந்த ஐசுவரியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள என்னை உணர்வுள்ள வனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிரசங்கி 11:1-3