புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 16, 2019)

விழிப்புடன் செயற்படுங்கள்

மத்தேயு 13:30

முதலாவது களைகளை ப்பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள் கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்


மேற்கத்தைய நாடு ஒன்றிலே, மாணவர்களுடன் தகாத முறையிலே நடந்து கொண்டதன் குற்றச்சாட்டிற்கு அமைய, ஒரு ஆசிரியர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். இப்படிப்பட்ட குறிப்பிட்ட சில ஆசிரியர்களின் தவறுகளினால், மாணவர் முன்னேற்றத்திற்காக அயராது உழைக்கும் ஏனைய, பெரும்பான்மையான ஆசிரியர்கள் யாவரையும் குற்றம் சாட்டுதல் மதியீனமான காரியம். நன்மையான ஈவுகள் யாவும் பிதாவினாலே எங்களுக்கு பல மனிதர்கள் வழியாக அருளப்படுகின்றது. சில ஆசிரியர்கள் தவறு செய்வதால், பாடசாலைகள் தேவையில்லை என்று பூட்டி விடுவது சரியாகுமா? பாடசாலைகள் எல்லாம் இப்படித்தான், எனவே வீடுகளிலே இருந்து பாடங்களை படிப்போம் என்று கூற முடியுமா? வீடுகளிலே குற்றங்கள் நடை பெறுவதில்லையா? எனவே ஒரு சில சம்பவங்களை வைத்து, ஒட்டுமொத்தமாக யாவரையும் குற்றம் சாட்ட முடியாது. இவ்வண்ணமாகவே, ஆராதனை ஸ்தலங்களிலே ஆங்காங்கே சில வேண்டப்படாத சம்பவங்கள் நடப்பதை கேள்விப்படுகின்றோம். எனவே ஆலயங்கள் எல்லாவற்றையும் முடிவிடுவோம், இனி வீடுகளிலே இருந்து ஆராதிப்போம் என்பது மதியீனம். யுத்த நாட்களிலும், சில தனிப்பட்ட வசதியீனங்கள் காரணமாகவும், சில மாணவர்கள் வீட்டில் இருந்து படிக்க வேண்டிய நிலை உருவாகுகின்றது போல சிலர் தாங்கள் இருக்கும் வீட்டிலும், வைத்தியசாலையிலும், பராமரிப்பு நிலையங்களிலும் இருந்து ஆராதனை செய்து வருகின்றார்கள். அவர்கள் நிலையை தேவன் நன்கு அறிவார். ஆனால், நீங்களோ, இப்படியாக தோன்றியிருக்கும் சில மனிதர்களின் தனிப்பட்ட பிழையான அபிப்பிராயத்தால் இழுப்புண்டு போகாமல்;, சபைகூடி வருதலை விட்டுவிடாதுமிருங்கள். எதிரியாகிய பிசாசானவன், நல்ல நாற்றுக்கள் மத்தியிலே சில களைகளை விதைத்திருப்பது மெய். அவைகளை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவன் தாமே, இறுதிநாளிலே, பரமபிதாவினால் நடாத நாற்றுக்கள் யாவற்றையும் வேரோடு பிடுங்கிப் போடுவார். எனவே, பொறுமையோடு உங்கள் ஓட்டத்தை ஓடி முடியுங்கள்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, எதிரியாகிய பிசாசானவனின் வஞ் சகமான உபதேசங்களினால் இழுப்புண்டு போகாதபடிக்கு, அடியேனுக்கு பிரகாசமுள்ள கண்களைத் தந்து வழிடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 15:13