புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 15, 2019)

காலந்தாழ்த்த வேண்டாம்...

பிரசங்கி 10:18

மிகுந்த சோம்பலினால் மேல்மச்சுப் பழுதாகும்; கைகளின் நெகிழ்வினாலே வீடு ஒழுக்காகும்.


வீட்டின் கூரையை தாங்கும் மரங்கள், உறுதியற்றதாயும், முறைப்படி இணைக்கப்படாததாயும் இருந்தால், படிப்படியாக, அந்த மரங்கள் தொய்ந்து கொண்டே கீழே போகும். காலப்போக்கில், அந்த வீட்டில் யாரும் வசிக்க முடியாத நிலை உண்டாகும். மிகுந்த சோம்பலுள்ளவன், எச்சரிப்பு தொனிகளை அசட்டை செய்து, பிரச்சனை வந்தபின் பார்ப்போம் என்று காலந்தாழ்த்துகின்றவனாக இருப்பான். பிரச்சனை வந்தபின், அதை சமாளிப்பதற்காக, தற்காலிகமாக, யுக்திகளை கையாளுவான். இது அவன் வாழ்க்கையில் ஒரு தொடர்கதையாக இருக்கும். இவ்வண்ணமாக அவன் தன் வாழ்க்கையை நடத்துவதால், அவன் வதிவிடத்தை அவன் பாழாக்கிப் போடுகின்றான். அவன் மட்டுமல்ல, அந்த வீட்டில் யாரும் வசிக்க முடியாது. பொறுப்புக்களில் இருக்கும் அதிகாரிகளும் தங்கள் கைகளின் கிரி யைகளை நெகிழவிட்டால், அவர்களும், அவர்கள் அதிகாரத்தின் கீழ் இருப்பவர்களும் அதிகாரிகளுடைய அசதியினால் பாதிக்கப்படுவார் கள். பிரியமானவர்களே, எங்கள் உள்ளான மனிதனின் காரியங்களும் அவ்வண்ணமாகவே இருக்கின்றது. நோயின் அறிகுறிகள் தென்படும் போது, வரவிருக்கும் பாதகத்தை தடுக்கும்படியாய் முன்ஏற்பாடுகளை செய்யாமல், நோய் வந்த பின் மருத்துவரைத் தேடுவோம் என்று கூறுவது மதியீனம். நடைபாதையில் ஒரு பெரும் குழி வெட்ட ப்பட்டிருப்தை காணும் போது, நாங்கள் அதற்கு விலகி நடக்கின்றோம். அதுபோலவே, மாம்சத்தின் கிரியைகளின் அறிகுறிகள் எங்கள் வாழ்வில் தென்படும் போது, ஆன்மீக மருத்துவராகிய இயேசுவை அண்டி சேருவோம். தேவனுடைய வார்த்தைகள் ஆன்மீக விடுதலை தரும் ஒளஷதம். அவற்றை வாசித்து, தியானித்து, கைக் கொள்ளுங்கள். உதாரணமாக, மனதிலே, பிரிவினைக்குரிய எண்ணங்கள் தோன்றும் போது, அதை வளரவிடாமல், முளையிலே அதை கிள்ளிவிடும்படியாய், சம்பந்தப்பட்டவர்களுடன் தயவாய் பேசுங்கள். (நீதி 15:1) வாக்குவாதங்களை விட்டுவிடுங்கள். (நீதி 17:14) உங்களுக்கு கெதிராக குற்றம் செய்தவர்களை மன்னியுங்கள். நீங்கள் குற்றம் செய்திருந்தால் மன்னிப்பை கேளுங்கள். (மத் 5:44)

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, எதிரியாகிய பிசாசானவனின் வஞ் சகமான உபதேசங்களினால் இழுப்புண்டு போகாதபடிக்கு, அடியேனுக்கு பிரகாசமுள்ள மனக் கண்களைத் தந்து வழிடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 24:30-34