புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 29, 2018)

கொடுங்கள்!

கொலோசெயர் 3:17

வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.


தேவனுக்கென்று கொடுப்பதற்கு விருப்பம் உண்டு ஆனால் கொடு ப்பதற்கு என்னிடத்தில் அதிகம் இல்லை என்று ஒரு மனிதன் கூறினான். தேவனுக்கு கொடுப்பதைப்பற்றி பேசும் போது, இன்றைய உலகிலே, பொதுவாக மனிதர்கள் பொருளாதார உதவிகளையும், சரீரத்திலே பிரயாசப்படுதல் (தங்கள் நேரத்தை கொடுப்பது) போன்றவற் றையே மையமாக வைத்துப் பேசுவார்கள். தேவனுடைய ஊழியத்தை நடப்பிப்பதற்கு இப்படிப்பட்ட உதவிகளும் அவசியமானது. எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் இருதயத்தை தேவனுக்கு கொடுக்க வேண்டும் என்று சிலர் சொல்லிக் கொள்வார்கள். இந்த கூற்று உண்மையானது. எந்த ஒரு கிறிஸ்தவனுக்கும் இது அடிப்படையானது. இருதயத்தை தேவனுக்கு கொடுத்திருக்கின்றோம் என எப்படி அறிந்து கொள்வது? அவரவர் தங்கள் தங்கள் நாளாந்த வாழ்க்கையிலே வெளிக்காட்டும் கனிகளினாலே, இருதயத்தை நிதானித்து அறிந்து கொள்ளலாம். இருதயத்தை தேவனுக்கென்று அர்ப்பணித்தவர்கள், தங்களிடம் உள்ள எல்லா நன்மைகளையும் தேவனுடைய ராஜ்யத்தின் வேலைக்காக தாராளமாய் கொடுப்பார்கள். ஆனால் சில வேளைகளிலே, இந்த உலக அளவு கோலின்படி, கொடுப்பதற்கு பணமோ பொருளோ இல்லாவிட்டால், நாங்கள் என்னத்தைக் கொடுக்க முடியும்? பணத்தையும் பொருளையும் விட அதிக விலையேறப்பெற்ற காரியங்களை நாங்கள் கொடுக்க முடியும். அந்த மேன்மையான காரியங்களை கொடுப்பதற்கு எங்களைத் தவிர, யாரும் எங்களை தடுக்க முடியாது. எங்களை சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கின்றோம். விசுவாசம், தைரியம், ஞானம், இச்சையடக்கம், பொறுமை, தேவ பக்தி, சகோதர சிநேகம், அன்பு போன்ற இவைகளை உங்கள் வார்த்தையினாலும், கிரியைகளினாலும் பிதாவாகிய தேவனுக்கு நன்றியாகத் தெரிவியுங்கள்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, உம்முடைய திவ்விய சுபாவத்திற்கு பங்காளிகளாக எங்களை அழைத்திருக்கின்றீர். அந்த சுபாவத்தை தாராளமாய் மற்றவர்களுக்கு காண்பிக்க என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 1:7