புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 27, 2018)

முழுமனதோடு நாடுங்கள்

1 தெச 5:5

நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.


சில வேளைகளிலே எங்கள் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவைகள். எடுத்துக்காட்டாக, திடீ ரென ஏற்பட்ட சூறாவளியினால், சில நாட்களுக்கு வீட்டைவிட்டு இடம்பெயர்ந்து இருக்க வேண்டியதாயிற்று அல்லது அயலவரின் குடும்பத்தில் ஏற்பட்ட இக்கட்டான சம்பவத்தினால் அவர்களுக்கு உதவ வேண்டியதாயிற்று. இப்படியான சம்பவங்களினால் எங்கள் நாளாந்த நடவடிக்கைகளின் ஒழுங்கு முறைகள் மாற்றம டைவதுண்டு. அதாவது, முன் குறித்த நேரத்தில் ஜெபம் செய்ய முடியாமலும், வேதத்தை வாசிக்க முடியாமலும் போய்விடுகின்றது. இப்படியான சூழ்நிலைகள் ஏற்படும் போது, நாங்கள் இன்னுமொரு நேரத்தில் வேதத்தை வாசித்து, தியானித்து, ஜெபிக்க வேண்டும். கடமைக்காக அல்ல, மனதார அப்படி செய்ய வேண்டும். ஆனால் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நிகழ்வுகளுக்காக, நாங்கள் தேவனுக்கு கொடுக்கும் நேரத்தை எங்கள் மனம் போன போக்கின்படி மாற்றிவிடுவோமாக இருந்தால், தேவனைக் குறித்து நாங்கள் கொண்டிருக்கும் வைராக்கியத்தின் அளவுகோலாக அது காணப்படும். உதாரணமாக, தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் அல்லது வீட்டிலே நடக்கவிருக்கும் திட்டமிடப்பட்ட இன்பகரமான கொண்டாட்டம், தேவனுக்கென்று பிரத்தியேகமாக கொடுக்கும் நாட்களில் விருந்தாளிகளை வீட்டிற்கு அழைத்தல் போன்ற சம்பவங்களை நாங்கள் செய்து வருவோமாக இருந்தால், நாங்கள் தங்கள் மணவாளன் வர ஆயத்தமில்லாத, புத்தியற்ற கன்னிகைகளைப் போல உணர்வற்றவர்களாக மாறிவிடுவோம். தங்கள் மணவாளன் நினையாத நாளிகையிலே வருவார் என்று அறிந்திருந்தும் அந்த புத்தியற்ற 5 கன்னிகைகள், தங்கள் விளக்கிற்கு எண்ணெய் ஊற்றாமல், ஆயத்தமற்றவர்களாக, அசதியாக இருந்தார்கள். நாங்கள் அப்படி இருக்காமல், எங்களுடைய வாழ்க்கையிலே, தேவனோடு உறவாட நாங்கள் முன் குறித்த நேரத்தில், அவர் சமுகத்தில் பயபக்தியோடு அவரை கிட்டிச் சேர வேண்டும்.

ஜெபம்:

இருதயத்தை ஆராய்து அறிகின்ற தேவனே, உம்மோடு உறவாடும் நேரத்தை நான் அற்பமாக எண்ணாமல், மன நிறைவுடனும் பரவசத்துடனும் உம்மைக் கிட்டிச் சேர என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 2:1-9