புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 24, 2018)

தேவனுடைய நேரம்

நீதிமொழிகள் 26:23

நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும்.


வெள்ளிப் பூச்சு பூசப்பட்ட களிமண்ணினாலே செய்யப்பட்ட மட்பாண்டம், தூரப் பார்வைக்கு வெள்ளிப் பாத்திரத்தைப் போல காணப்படும். அதன் வெளித்தோற்றம் வெள்ளியாக காட்சியளித்தாலும், அதன் உண்மை நிலை, மட்பாண்டத்திற்கு ஒத்ததாகவே இருக்கும். அதே போலதான் இனிய வார்த்தைகளை பேசும், தீய நெஞ்சமும் இருக்கும் என நீதிமொழிகளின் புத்தகத்திலே கூறப்பட்டிருக்கின்றது. தாவீது ராஜாவின் ஆட்சிக்காலத்திலே, சேபா என்னும் பேருள்ள துன்மார்க்கன், தாவீதினிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை என்று கூறி, ஜனங்களுக்குள் பிரிவினையை உண்டு பண்ணியிருந்தான். அந்நாட்களிலே யூதா மனுஷரை கூட்டும்படிக்கு, அமாசா என்னும் போர்வீரனுக்கு, தாவீது கட்டளை கொடுத்து அனுப்பியிருந்தான். படை த்தளபதியாகிய யோவாப் என்பவன் ஜனங்களுக்குள் பிரிவினை உண்டாக்கின சேபாவுக்கு எதிராக யுத்தத்திற்கு போகும் போது, வழியிலே அமாசா என்னும் வீரன் எதிர்ப்பட்டான். அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என் சகோதரனே, சுகமாயிருக்கிறாயா என்று இனிய வார்த்தைகளைப் பேசி, அமாசாவை முத்தஞ்செய்யும்படி, தன் வலதுகையினால் அவன் தாடியைப் பிடித்து, தன் கையிலிருக்கிற பட்டயத்திற்கு அமாசா எச்சரிக்கையாயிராத போது, யோவாப் அவனை கொன்றுபோட்டான். இனிய வார்த்தைகளை கேட்டு, நம்பி ஏமாற்றமடைந்த சூழ்நிலைகள் எங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். இதனால் சிலர் சொல்ல முடியாத வேதனைக்கு உட்பட்டிருக்கின்றார்கள். கர்த்தர் நிமித்தம் அந்த மனிதனை நம்பினேன், ஆனால் இப்படியாக நடந்து விட்டது என மனவருத்தம் அடைகின்றார்கள். இப்படியான சூழ்நிலைகளிலே திடனற்று போய் விடாதிருங்கள். பதிலடி கொடுக்க வேண்டும் என எத்தனம் செய்யாதிருங்கள். கர்த்தரை நம்பி நன்மை செய்யுங்கள். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருங்கள். உங்கள் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து பொறுமையாக இருங்கள். அவர் உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களை உங்களுக்கு அருளிச்செய்து, காரியத்தை வாய்க்கச் செய்வார்.

ஜெபம்:

உண்மையுள்ள தேவனே, என் வாழ்க்கையிலே ஏமாற்றங்களை சந்திக்கும் போது, பதற்றமடையாமல், உம்முடைய பாதத்தில் பொறுமையாக காத்திருக்கும்படி எனக்கு பெலன் தந்து வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 சாமுவேல் 20:1-9