புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 23, 2018)

அழுத்தும் சுமைகளை தள்ளிவிட்டு

ரோமர் 8:18

ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.


போகும் பாதை மிகவும் கடினமானது. நாள்தோறும் முகங்கொடுக்கும் சவால்கள் அதிகம். அன்றாட பிழைப்பிற்காக கடினமான உழைப்பு. இவைகள் மத்தியிலும் ஒரு தாயானவள், ஞாயிறு தோறும், காலையிலே, நேரத்தோடே, தன் கிராமத்திலுள்ள சிறிய ஆலயத்திற்கு சென்று, அதை கூட்டி சுத்தம் செய்து, ஆராதனைக்கு தன்னால் முடி ந்த ஆயத்தத்தை செய்வதற்கு ஒருநாளும் பின்நின்றதில்லை. இப்படியாக தங்கள் நிலையை பொருட்டாக எண் ணாமல், சிறிதான பணியோ, பெரி தான பணியோ அதை நிறைவேற்ற வேண்டும் என்று மன வைராக்கியத்துடன் பலர் செயற்பட்டு வருகின்றார்கள். அந்த தாயானவளுக்கு கொடுக்க ப்பட்ட அளவின்படி, தான் தேவனுக்கென்று செய்யக் கூடியதை சலித்துப் போகாமல் செய்து கொண்டு வந்தாள். சில வேளைகளிலே, வாழ்க்கையில் விடியல் எப்போது வரும் என்ற ஏக்கம் மனதை ஆட்க்கொண்டு விடுகின்றது. சற்று தரித்திருந்து உங்கள் இருதயத்தின் ஆழத்திலே தேவன் கொடுத்திருக்கும் விடியலை ஆராய்ந்து பாருங்கள். எரியாத மெழுகுவர்த்தி மனிதர்களுடைய பார்வைக்கு முழுமையாக இருக்கும். ஆனால் எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தி, தன் நிலையை உருக்கி, அதன் அளவின்படி சுற்றுப்புறத்தை ஒளியேற்றுகின்றது. அந்தக் காட்சி தேவனுடைய பார்வையிலே எவ்வளவு விலையேறப் பெற்றது! பிரியமானவர்களே, இப்படியான நிலையில் நீங்கள் இருந்தால், தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கின்ற எங்கள் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி பாருங்கள். நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள். காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, இக்காலத்திலே தோன்றுகின்ற பாடுகளை அல்ல, பிற்பாடு வர இருக்கும் பெரிதான கனமகிமையை காணத்தக்கதான பிரகாசமுள்ள மனக்கண்களைத் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:17