புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 22, 2018)

நீங்கள் கிருபை பெற்றவர்கள்

2 கொரிந்தியர் 9:8

...தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையை யும் பெருகச்செய்ய வல்லவ ராயிருக்கிறார்.


காபிரியேல் என்னும் தேவதூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தெ ன்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற் றவளே வாழ்க, என்று வாழ்த்துரை கூறினான். மீட்பராகிய இயேசு இந்த உலகத்திற்கு வருவதற்கு, தேவனுடைய கருவியாக பயன்படுத்தப்பட்ட இந்த எளிமையான ஸ்திரி, தேவனுடைய கண்களிலே கிருபை பெற்றவளாக இரு ந்தாள். எங்களுடைய வாழ்க்கையிலும் நாங்கள் தேவனுடைய கிருபையை எப்போதும் வேண்டிக் கொள்கின்றோம். நாங்கள் எங்கள் பாவத்திலே அழிந்து போகாமல் இருப்பது தேவனுடைய கிருபையாக இருக்கின்றது. தேவனுடைய கிருபை யானது காலைதோறும் புதியதாக இருக்கின்றது. அந்த கிருபையை நாங்கள் பெற்றுக் கொள்ளும்போது மிகவும் சந்தோஷப்படுகின்றோம். ஆனால் மரியாளோ, தேவனுடைய சமுகத்திலே கிருபையை பெற்றுக் கொண்டபோது, தன்னை முற்றாக தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்தாள். எங்களுடைய வாழ்க்கையிலே நாங்கள் எப்போதும் பெற்றுக் கொள்வதையே நாடுகின்றோம். ஆனால் நாங்கள் எங்களை கொடுக்க வேண்டும். நாங்கள் பெற்ற கிருபையை மற்றவர்களுக்கு நடைமுறையிலே காண்பிக்க வேண்டும். நாங்கள் கண்ட மெய்யான ஒளியை மற்றவர்கள் எங்களில் காண வேண்டும். எங்களுடைய புகழ்சிக்காக அல்ல, தேவனுடைய நாமத்தின் மேன்மைக்காக. பூமியும் அதன் நிறைவும் அதன் குடியும் கர்த்தருடையது. எங்கள் உயிர் மட்டுமல்ல, பொருளோ, பணமோ, கல்வி, வீடு வாசல் மற்றும் செல்வாக்குகள் எல்லாம் தேவனுடைய கிருபையால் உண்டானது. நீங்கள் பெற்ற தேவ கிருபையை, சிறுமைப்பட்டவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, மனப்பூர்வமாக பகிர்ந்து கொள்ளுங்கள். சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். பெருகச் செய்கின்ற தேவனாலே எல்லாம் ஆகும்.

ஜெபம்:

ஆசீர்வதிக்கும் தேவனே, உம்மிடத்திலிருந்து பெற்றுக் கொண்டவைகளை உம்முடைய நாமத்தின் மகிமைக்காக இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்படியான இருதயத்தை தந்தருள்வீராக! இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 24:1-2