புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 21, 2018)

இரக்கமுள்ளவர்களாயிருங்கள்

யாக்கோபு 5:20

தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதன், மரங்களை வெட்டும்படிக்கு, குறிப்பிட்ட காட்டுப் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தான். அந்த காட்டுப்பகுதி பயங்கரமான வன விலங்குகளும் விஷப் பாம்புகளும் நிறைந்தது, எனவே அங்கு செல்ல வேண்டாம் என அந்த ஊரிலுள்ள மக்களும் மூப்பர்களும் அந்த மனிதனை எச்சரித்தார்கள். ஆனால் அந்த மனிதன் அந்த எச்சரிப்பைப் பொருட்படுத்தாமல் அங்கு சென்று சில மரங்களை வெட்டிக் கொண்டு வீடு திரும்பினான். இப்படியாக அவன் போக்கும்வரத்துமாக இருந்தான், சில நாட்களுக்கு பின், அந்த காட்டுப் பகுதியிலிருந்து, உதவிக்காக எழும்பும் அவலக் குரலை அந்த ஊர் மக்கள் யாவரும் கேட்டார்கள். அங்கு விரைந்தோடிய பலர், அந்த மனிதன் வனவிலங்குகளால் கடுமையாக காயமுற்றிருப்பதைக் கண்டார்கள். “இது இந்த மனிதனுக்கு நல்ல பாடம்” “இவன் எங்கள் எச்சரிப்பை அசட்டை செய்தான் அல்லவோ” “தன்னையே தான் காத்துக் கொள்ளட்டும்” என்று பலரும் பலவிதமாக பேசினார்கள். ஆனால், அந்த ஊரின் மூப்பர்களில் ஒருவர், விரைந்து சென்று, அவனை, தூக்கி, அவன் உயிரைக் காக்கும்படிக்கு, அருகிலுள்ள வைத்திய நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். பிரியமானவர்களே, பரலோகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நாமும், மனிதர்கள், எந்த காரணத்திற்காகவும் நரகத்திலே அழிந்து போகும்படிக்கு விடக்கூடாது. “மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி. அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ?” என்று வேதத்திலே வாசிக்கின்றோம். அறியாமல் பாவம் செய்பவர்களை மட்டுமல்ல, அறிந்தும் பாவம் செய்பவர்களையும், நல்வழிப்படுத்த கிடைக்கும் சந்தர்ப்பங்களை பிரயோஜனப்படுத்துங்கள். அழிவுக்கல்ல, ஜீவனுக்கேதுவான கிரியைகளை நடப்பியுங்கள்.

ஜெபம்:

அன்புள்ள பரலோக பிதாவே, பல முறை விழுந்தாலும் நீர் எங்களை தள்ளிவிடாமல் அணைப்பது போல, நாங்கள் மற்றவர்களின் இக்கட்டிலிருந்து அவர்களை விடுவிக்கும் உள்ளத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 15:4-10