புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 16, 2018)

நிலையை அறிந்து கொள்ளுங்கள்

ரோமர் 12:3

உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ண வேண்டும்.


கர்த்தருடைய அழைப்பை குறித்து உணர்வில்லாதவர்களாக இருப்பது மதியீனமான செயல் என்பதை குறித்து கடந்த நாள் தியானத்திலே பார்த்தோம். மரமானது அதன் கனியினால் அறியப்படுவது போல, மூடனானவன் தன் மூடத்தனத்தில் நடக்கின்றான் என்று அவனைப் பார்ப்பவர்கள் அறிந்து கொள்வார்கள். அப்படியான மூடத்தனமாக நடக்கின்றவர்களில் சிலர் தங்கள் நிலையை குறித்து விவாதிப்பதில்லை. சில வேளைகளிலே தங்கள் உண்மையான நிலையை அவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். ஆனாலும் இன்னுமொரு சாரார், தங்கள் பார்வைக்கு ஞானிகளாக இருக்கின்றார்கள். அதாவது, வாழ்க்கையைக் குறித்து தாங்கள் வைத்திருக்கும் அளவுகோலை வைத்து, தாங்களே தங்களை புத்திமான்களாக எண்ணிக்கொள்கின்றார்கள். இப்படிப்ப ட்டவர்கள் தாங்கள் செய்வது சரி என்னும் பெருமை இவர்களுக்கும் இருப்பதால், தங்கள் உண்மை நிலையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தங்களை எப்போதும் மற்றவர்களைவிட மேன்மையுள்ளவர்களாக எண் ணிக் கொள்வதால், தாங்கள் பரிதாபமான நிலையிலிருந்து மீண்டு கொள்ள இடமளிக்கமாட்டார்கள். தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம் என நீதிமொழிகளின் புத்தகத்திலே வாசிக்கின்றோம். பிரியமானவர்களே, தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்திலே நாங்கள் எங்களை அவ்வப்போது ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஜெபம் செய்யச் சென்ற பரிசேயன், தன் அவல நிலையை உணராமல், தான் இந்த பாவியான ஆயக்காரனைப் போல வாழாதபடியால் நன்றி என்று கூறினான். தான் செய்யும் கிரியைகளைக் குறித்து மேன்மையாக பேசினான். ஆனால், அவன் நீதிமானாக வீடு திரும்பவில்லை. தன்னை தாழ்த்தி தன் நிலையை ஏற்றுக் கொண்ட ஆயக்காரன், நீதிமானாக வீட்டுக்கு சென்றான்.

ஜெபம்:

அன்பான பிதாவே, என் நிலையைக் குறித்து, வீண் பெருமை கொள்ளாமல், என்னுடைய உண்மையான நிலையை உணர்ந்து கொள்ளும்படியான பிரகாசமுள்ள மனக் கண்களை எனக்குத் தந்தருளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 26:12