புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 15, 2018)

புத்திமான்களாய் வாழ்வோம்!

மத்தேயு 25:13

மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.


மதியீனமாக வாழும் மனிதர்களை குறித்து பரிசுத்த வேதாகமத்திலே பல இடங்களிலே குறிப்பிடப்பட்டுள்ளது. சில இடங்களிலே இப்படிப்பட்டவர்களை மூடர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த உலகத்திலே தேவ பயம் இன்றி வாழ்பவர்கள் மதியீனமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் இந்த உலக முறைமையின்படி கல்வி கற்றிருக்கலாம், ஆனால் இவர்கள் தேவ நியமங்களை அசட்டை செய்து தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என்று, பலவிதமான இச்சைகளை தங்களில் நடப்பிக்கின்றார்கள். இவர்களில் சிலர் தேவன் இல்லை என்று கூறும் மதிகேடுள்ளவர்களாக மாறிவிடுகின்றார்கள். ஏன் இவர்களை மதிகெட்டவர்கள் என்று கூறப்படுகின்றது? பிதாவாகிய தேவன்தாமே, பரலோகத்திலே தம்முடன் நித்தியம் நித்தியமாய் சந்தோஷமாய் வாழும்படியான அழைப்பை யாவருக்கும் கொடுத்திருக்கின்றார். அதே வேளையிலே, நித்திய நரகத்திலே கொடூரமான ஆக்கினையடையும்படியாக பிசாசானவனும் அழைப்பு கொடுக்கின்றான். காரியம் இப்படியாக இருக்கும் போது, இந்த உலகிலே வாழும் பல மனிதர்கள், பிதாவாகிய தேவனின் உன்னதமான அழைப்பை நிராகரித்து, பிசாசானவனின் வஞ்சகமான சூழ்ச்சியை தெரிந்து கொள்கின்றார்கள். இவர்கள் மதிகெட்டவர்கள். இவர்கள் நன்மை இன்னது என்று உணர்ந்து கொள்ள இடங்கொடாமல், மெய்யான ஒளியாகிய கிறிஸ்துவை வெறுத்து, இருளை பற்றிக் கொள்கின்றார்கள். புத்தியுள்ளவர்கள் யார்? கர்த்தராகிய இயேசு கிறி ஸ்து கூறிய வார்த்தைகளைக் கேட்டு, அதற்கு கீழ்ப்படிந்து, அதன்படி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றவர்கள் புத்திமான்களாக இருக்கின்றார்கள். தங்கள் மணவாளனின் வருகைக்காக காத்திருந்த 10 கன்னிகைகளின் உவமையில், ஜந்து பேர், புத்தியில்லாதவர்களாக ஆயத்தமற்றிருந்தார்கள். மணவாளன் வந்த போது, உங் களை அறியேன் என்றார். நித்திய வாழ்வை எதிர்பார்த்திருக்கும் நாங்கள், விழிப்புடன் தங்கள் மணவாளனின் வருகைக்காக காத்திருந்த ஐந்து புத்தியுள்ள கன்னிகைகளைப்போல இயேசுவின் வருகைக்காக எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, மதிகெட்டவர்களைப் போல வாழாமல், பரலோகத்தில் பங்குள்ளவர்களாகும்படி நீர் தந்த அழைப்பின் மேன்மையை உணர்ந்து கொள்ளும் இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 25:1-13