புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 13, 2018)

கிறிஸ்துவுக்கு சொந்தமானவர்கள்

1 கொரிந்தியர் 6:20

கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகி மைப்படுத்துங்கள்.


“இது என்னுடைய வாழ்க்கை! இது என்னுடைய சரீரம்! நான் விரும்பியபடி வாழ்வேன்” என மனிதர்கள் சொல்வதை கேட்டிருக்கி ன்றோம். இப்படிப்பட்ட அறிக்கைகள் கருத்தாழமுடையவைகள். தேவனாகிய கர்த்தர் தாமே, ஆசீர்வாதத்தையும், சாபத்தையும், ஜீவனை யும், மரணத்தையும் மனிதர்களுக்கு முன்பாக வைத்திருக்கின்றார். இவற்றுள், மனிதர்கள் தாங்கள் விரும்பினதை தெரிந்து கொள்ளலாம். வாழ்வடையும்படிக்கு நீ ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் தெரிந்து கொள்ளு என்று ஆலோசனை கூறியிருக்கின்றார். எனவே எங்களுடைய விருப்பமானது, தேவனுடைய சித்தமாக இருக்குமென்றால் எங்கள் வாழ்க்கையில் முடிவில்லாத நன்மையை சுதந்தரித்துக் கொள்கின்றவர்களாக இருக்கின்றோம். ஆனால், எங்களுடைய விருப்பமானது, தேவனுடைய சித்தத்திற்கு விரோதமானதாக இருந்தால், நாங்கள் எங்கள் சரீர இச்சைகளை திருப்திப் படுத்துகின்றவர்களாயிருப்போம். அப்படி எங்கள் வாழ்க்கை தொடரும் போதும் அதன் முடிவிலே சாபமும் நித்திய மரணமுமிருக்கும். நாங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எங்கள் மீட்பராக ஏற்றுக் கொண்டு, அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிய எங்களை ஒப்புக்கொடுத்த நாளிலே, நாங்கள் கிறிஸ்துவினுடையவர்களாக மாற்றப்பட்டிருக்கின்றோம். உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? என்று தேவ ஊழியராகிய பவுல் அறிவுரை கூறியிருக்கின்றார். மேலும் அவர் கூறுகையில், கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கக்கடவோம். அதாவது இது என்னுடைய வாழ்க்கை, இது என்னுடைய சரீரம், ஆனால் அதில் கிறிஸ்து வழியாக பிதாவாகிய தேவன் மகிமைப்படும்படிக்கு, தெய்வீக சுபாவங்களாகிய ஆவியின் கனி எங்களில் வெளிப்பட வேண்டும்.

ஜெபம்:

பரலோக தந்தையே, உம்முடைய திருக்குமாரன் கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பி எங்களை உம்முடையவர்களாக்கிக் கொண்டீர். அதன்படி நான் திவ்விய சுபாவங்களை வெளிப்படுத்த என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - காலத்தியர் 5:24-25