புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 11, 2018)

பிதாவின் சித்தம் என் வாழ்வில்...

மத்தேயு 6:10

உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப் படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.


பிதாவாகிய தேவனுடைய சித்தம் என் வாழ்க்கையில் நிறைவேற வேண்டும் என்னும் ஆசை பலரின் மனதில் உண்டு. அந்த ஆசை நிறைவேறும்படியாக எங்கள் அர்ப்பணிப்பும், பிரயாசமும் வேண்டும். “என்னவோ ஏதோ, அவருடைய சித்தம் நிறைவேறும்” என்று சில மனிதர்கள் தங்கள் விரக்தியில் அறிக்கையிடுவதுண்டு. இப்படிப்பட்ட மனநிலையை உண்மையான அர்ப்பணிப்பு என்று கூறமுடியாது. தேவனுடைய ஆளுகை, தேவனுடைய சித்தம், அதை அவர் என் வாழ்வில் செய்து முடிப்பார் என்ற விசுவாசம் எங்களில் இருக்க வேண்டும். நாங்கள் தேவனை அன்பு செய்யாவிடில், இப்படிப்பட்ட விசுவாச அறிக்கை கருத்தில்லாதிருக்கும். நாங்கள் மனதார எங்களை அர்ப்பணித்து, பிரயாசப்பட ஆயத்தமாக இருக்கும் போது, மிகுதியானவற்றை தேவனுடைய ஆவியானவர் தாமே ஆதரவாயிருந்து எங்களை வழிநடத்திச் செல்வார். எங்களுடைய வாழ்க்கை என்று கூறும் போது, திருமணம் மட்டுமல்ல, வாழ்க்கையின் எல்லா விடயங்களிலும் தேவனுடைய சித்தம் நிறைவேற இடங் கொடுக்க வேண்டும். ஒருவன் தன்னுடைய இஷ்டப்படி தான் திருமணம் செய்யும் பெண்ணை தெரிந்து, நிச்சயித்த பின், தேவனே உமக்கு சித்தமா? என்று கேட்பது அர்த்தமற்ற செயல். அது போலவே, எங்களுடைய கல்வி, வேலை, மற்ற எந்த காரியங்களும் தேவனுடைய சித்தப்படி நடைபெற இடங்கொடுக்க வேண்டும். நாங்கள் என்ன படிக்க வேண்டும், நாங்கள் எந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எங்களுடைய சுயவிருப்பம் உண்டு. பெற்றோர் உறவுகள் நண்பர்களின் விருப்பங்களும் உண்டு. நாங்கள் வேலை செய்ய விரும்பும் வேலை ஸ்தலங்கள் உண்டு. அவைகளை நாங்கள் தெரிந்து கொள்ள முன், முற்றாக தேவனுடைய பாதத்திலே ஒப்படைக்கும் போது அவர் நிச்சயமாக வழிநடத்துவார். தேவனுடைய சித்தம் பூரணமாக நிறைவேற நாங்கள் எங்களை அர்ப்பணிக்க வேண்டும். தேவனுடைய சித்தம் பூரணமாக நிறைவேற நாங்கள் இடங்கொடுக்காமல், எங்கள் சுயவிருப்பத்தை பின்பற்றும் போது, அநாவசியமான விடயங்களுக்கு நாங்கள் முகங்கொடுக்க நேரிடும்.

ஜெபம்:

பரலோகத்திலிருக்கின்ற எங்கள் பிதாவே, என்னுடைய வாழ்வில், எல்லா விடயங்களிலும் உம்முடைய பூரணமான சித்தம் நிறைவேறும்படி இடங்கொடுக்க, உணர்வுள்ள இருதயத்தைத் தந்து வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 1:37-38

Category Tags: