புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 10, 2018)

எதிர்கால பயங்கள்

மத்தேயு 6:27

கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?


நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும் என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கின்றார். ஆனால் இந்த உலக ஞானமானது, பரத்திலிருந்து வரும் தெய்வீக ஞானத்திற்கு எதிராக அறிவுரை கூறுகின்றது. இன்று பல மனிதர்கள், நாளைய தினத்தை குறித்து மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு பின் நடைபெற வேண்டியவைகளைக் குறித்து அதிக கவலை அடைகின்றார்கள். பிள்ளைகளின் எதிர்காலம், கல்வி, பொருளா தாரம் அவற்றுள் சில. இந்த உலக த்தின் போக்குகளின்படி அறிவுரை வழங்கும் கல்விமான்கள் எதிர்காலத்தை பற்றி அதிகமாக சிந்திக்க தூண்டுகின்றார்கள். முன்னைய நாட்களிலே சாஸ்திரிகள் குறி சொல்வதைப் போல, இன்று பலதரப்பட்ட மனிதர்கள் தங்கள் சொந்த இலாபத்திற்காக, எதிர்காலத்தைப் பற்றி மனிதர்களை அதிகமாக சிந்திக்க வைக்கின்றார்கள். அதிகதிகமாக நாட்டின் பொருளாதார நிலைமைகளையும், தேசங்களுக்கிடையிலான யுத்தங்களையும் குறித்து இன்று பல செய்திகளை பேசி ஜனங்களை கலங்கடிக்கின்றார்கள். இவை யாவும் எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அடிப்படை உபதேசத்திற்கு முரணானவைகள். இயேசு சொன்னார்: “யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்;.” “இந்த உலகத்திலே உங்களுக்கு உபத்திரவங்கள் உண்டு ஆனாலும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன்.” “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைக ளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.” மேலும், தேவ மனிதனாகிய பவுல், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், எதுவானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் என்று தேவ மனிதனாகிய பவுல் அறிக்கையிட்டிருக்கின்றார். எனவே, கவலையடைவதைவிட்டு, கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருங்கள்.

ஜெபம்:

சகலமும் படைத்த சர்வ வல்ல தேவனே, எதிர்காலத்தைக் குறித்து கவலையடையாமல், உம்மை நம்பி, உம்முடைய வழிகளில் நான் கருத்தோடு நடக்கும்படி எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 56:3