புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 08, 2018)

ஜெபம் இன்றியமையாதது

எபேசியர் 6:20

நான் தைரியமாய் என் வாயைத்திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்கு கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண் ணப்பம்பண்ணுங்கள்.


மேற்கத்தைய நாடு ஒன்றிற்கு இடம்பெயர்ந்திருந்த மனிதன்;, அந்த நாட்டின் பிரஜை ஒருவரின் குழந்தை பெரும் உயிர் ஆபத்தில் அகப்பட்டிருந்த போது, தன் உயிரை பொருட்படுத்தாது, காலத்தைத் தாமதிக்காமல், அந்தக் குழந்தையை காப்பாற்றினான். அதனால் அந்த நாட்டின் தலைவர், இடம் பெயர்ந்த மனிதனை கௌரவிக்கு முகமாக அவருக்கு குடியுரிமையையும், கனமுள்ள உத்தியோகத்தையும் வழங்கினார். அந்த நாட்டின் தலைவர் அந்த மனிதனுக்கு குடியுரிமை வழங் கியதால், அந்த மனிதன் அந்த நாட்டின் சட்டங்களுக்கும் ஒழுங்கு முறைக்கும் அப்பாற்பட்டவனாகிவிடுவானோ? இல்லை! பிரஜைகளைப் போல அவனும் எல்லா ஒழுங்கு முறைகளுக்கும் உட்பட்டிருக்கின்றான். இதே போலவே எங்கள் வாழ்க்கையிலும், அழைப்புகளை பெற்றுக் கொள்கின்றோம். சில இடங்களுக்கு கௌரவ விருந்தாளிகளாக அழைக்கப்படுகின்றோம். அதனால் நாங்கள் ஒழுங்கு முறைகளை மீறிக் கொள்ள முடியாது. இவ்வண்ணமாகவே, தேவனுடைய மனுஷனாகிய பவுல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் பிரத்தியேகமாக, பிரதியட்சமாக, தம்முடைய நற்செய்திப்பணிக்காக அழைக்கப்பட்டார். அதனால் அவர், தேவ ஒழுங்கு முறைகளுக்கு அப்பாற்பட்டவரைப் போல நடந்து கொள்ளவில்லை. தன்னுடைய நிரூபங்களிலே, தான் அழைக்கப்பட்ட ஊழியத்தை நிறைவேற்றும்படி தனக்காகவும் ஜெபம் செய்யும்படி வேண்டிக் கொண்டார். நாங்கள் ஒருவருக்காக ஒருவர் எப்போதும் ஜெபம் செய்ய வேண்டும். தேசத்தை ஆளுகின்றவர்கள், தேசத்தின் சகலவித அதிகாரிகள், குடிமக்கள், தேவ ஊழியர்கள், மற்றும் சபையார் யாவருக்காகவும் ஜெபம் செய்ய வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாக இருக்கின்றது. எனக்கு ஜெப ஊழியம் இல்லை என்று ஒருவரும் சொல்ல முடியாது. எங்கள் தந்தையுடன் பேசும்படி எனக்கு அழைப்பு இல்லை என்று யாரும் சொல்ல முடியுமா? இல்லை! எனவே ஒருவருக்காக ஒருவர், எப்போதும், ஊக்கமாக, ஜெபம் செய்யுங்கள்.

ஜெபம்:

அன்புள்ள பரலோக தேவனே, உம்முடைய சமுகத்திலே மற்றவர்களுக்காக பரிந்து பேசி ஜெபிக்கும் பாக்கியத்தை எனக்கு தந்தமைக்காக ஸ்தோத்திரம். அதை மனதார செய்யும்படி என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:25