புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 07, 2018)

குற்றத்தில் அகப்பட்டால்…

நீதிமொழிகள் 22:11

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான்.


நாங்கள் குற்றம் செய்து குற்றவாளிகளின் ஆசனத்தில் இருக்கும் நாட்கள் உண்டாயிருந்தால் என்ன செய்ய வேண்டும்? வாகனத்தை அதி வேகமாக ஓட்டிக் கொண்டு சென்ற மனிதன் ஒருவனை, இடை மறித்த பொலிஸ் அதிகாரி, சட்டப்படி அவனுக்கு கொடுக்க வேண்டிய அபராதத்தைத் செலுத்தும்படி கட்டளையிட்டார். நீதிமன்றத்திற்கு சென்ற அந்த மனிதனைப் பார்த்த நீதிபதி: நீ வாகனத்தை இப்படி ஓட்டுவதால், நீ உன் உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணுவதோடு, இன்னும் பலரின் வாழ்க்கையை நிரந்தரமாக பாதிக்கக்கூடிய பல பங்கங்களை உண்டு பண்ணலாம். ஆகவே சாலை விதி முறைகளை கைக் கொண்டு வாகனத்தை செலுத்தும்படி அறிவுரை கூறினார். அவன் தன் குற்ற த்தை ஏற்றுக் கொண்டு, மன்னிப்பு கேட்டபடியால், அந்த நீதிபதி, அவனு க்கு குறைந்த பட்சமான தண்ட னையை வழங்கினார். பிரியமானவர் களே, இந்த சம்பவத்திலே, அந்த பொலிசார் தன் வேலையை சீராக செய்தார். நீதிபதியும் அவனுடைய நன்மையையும், சாலையிலே பயணம் செய்யும் பொது மக்களின் நன்மைகளைக் கருதி, அவனுக்கு தகுந்த புத்திமதியை வழங்கினார். தன் குற்றத்தை ஒப்புக் கொண்டவன், அதை மனதார செய்திருந்தால் அது அவனுக்கு நன்மை. ஆனால் சந்தர்ப்பத்திற்கு தப்பிகொள்ள பாசாங்கு செய்திருந்தால், அது அவனுக்கு தீமையாக இருக்கும். இயேசுவின் சீஷர்களாகிய பேதுருவும், யூதாசும் இயேசுக்கு துரோகம் பண்ணினார்கள். யூதாஸ் ஆரம்பத்திலிருந்தே கள்வனாக இருந்தான் என வேதம் குறிப்பிடுகின்றது. சில ஆண்டுகள் கர்த்தரோடு இருந்தும், அவன் மனந்திரும்ப மனதில்லாதவனாக இருந்தான். அதனால் அவன் பாதகமான முடிவை சந்தித்தான். பேதுருவோ கர்த்தரை நேசித்தான். தான் குற்றம் செய்தேன் என்று கண்ட போது, மனங்கசந்து அழுதான். அவன் தன் குற்றத்தை ஏற்றுகொண்டான். உயிர்தெழுந்த கர்த்தர் அவனைத் தேடி வந்தார். அவனை மீண்டும் பெலப்படுத்தி, தூக்கி நிறுத்தினார். எங்கள் வாழ்க்கையில் மனந்திரும்ப கொடுக்கப்பட்ட அருமையான சந்தர்ப்பங்களை தட்டிக் கழித்துவிடாமல், உள்ளத்தைப் பார்க்கும் தேவன் முன்னிலையில் முற்றிலும் அர்ப்பணிப்போம்.

ஜெபம்:

கிருபை நிறைந்த நல்ல ஆண்டவரே, தினமும் உம்முடைய பாதத்தில் அமர்ந்து உம்மோடு பேசும் படியான பாக்கியத்தை நான் அற்பமாக எண்ணாதபடிக்கு என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும்.. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 32:5