புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 06, 2018)

சாந்த குணம் வெளிப்படுவதாக

நீதிமொழிகள் 24:11

மரணத்துக்கு ஒப்பிக்கப் பட்டவர்களையும், கொலையுண்ணப் போகிறவர்களையும் விடுவிக்கக் கூடுமானால் விடுவி.


குற்றத்தில் கையும் மெய்யுமாக அகப்பட்ட மனிதன் ஒருவனை விசாரிக்கும் படி ஒரு அமைப்பின் முக்கிய அங்கத்தவர்கள் கூடினார்கள். தனக்கு ஆதரவு ஏதும் கிடைக்கும் என அவன் கண்கள் ஒவ்வொரு அங்கத்தவர்களையும் நோக்கிப் பார்த்தது. சற்று நேரம் சென்றபின், அவன் எழுந்து, பேசுவதில் பயன் இல்லை என்று கூறியபடி, அந்த அமைப்பையும், அந்த ஊரையும் விட்டு தூர இடத்திற்கு போய்விட்டான். எங்கள் வாழ்க்கையில் நாங்கள் குற்றவாளிகளின் நாற்காலியில் அல்லது குற்றம் விசாரிக்கும் அங்கத்தவர்களின் நாற்காலியில் உட்கார நேரிடலாம். எந்தப் பக்கம் உட்கார நேரிட்டாலும் நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நிலை, வீட்டிலோ, பாடசாலையிலோ, வேலை செய்யும் இடத்திலோ அல்லது ஆலயத்திலோ உண்டாயிருக்கலாம். நியாயத்திலே முகதாட்சிணியம் நல்லதல்ல. ஆனால் நாங்கள் நியாயம் விசாரிக்கின்றவர்களின் இடத்தில் இருந்தால், குற்றம் செய்தவனின் ஆத்துமாவை பாதளத்திலிருந்து காத்துக் கொள்ளகூடிய நிலைமை உண்டாயிருந்தால் நாங்கள் காத்துக் கொள்ள வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கும் போது அவருடன் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன், தன் குற்றங்களை ஏற்றுக் கொண்டு, தேவனுக்கு பயந்து, மனந்திரும்புகின்ற இதயமுள்ளவனாக இருந்தான். அந்த நாட்டிலுள்ள அதிகாரிகளினால் அவனுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. அந்த குற்றவாளி தான் செய்த குற்றத்திற்கு தான் பெற்ற தண்டனையை ஏற்றுக் கொண்டான். அந்த குற்றவாளியை சிலுவையிலிருந்து விடுதலையாக்க இயேசுவால் கூடும். ஆனால், அவனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையைக் குறித்து இயேசு ஏதும் எதிர்த்துப் பேசவில்லை. ஆனால் அவன் ஆத்துமா நித்திய மரணத்தை அடையாமல், அவனை மீட்டுக் கொண்டார். அப்படிப்பட்ட மனநிலையுடையவர்களாக நாங்கள் மாற வேண்டும். சோதனைக்கு உட்படாதபடிக்கு, சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களை தேவனோடு சீர்பொருந்தப்பண்ணுங்கள்.

ஜெபம்:

நீடிய சாந்தமுள்ள தேவனே, உம்முடைய கண்களில் எனக்கு கிருபை கிடைக்காவிடின் நான் என் பாவத்திலே நிர்மூலமாகியிருப்பேன். உம்முடைய சாந்தம் என் வழியாக மற்றவர்களுக்கும் காண்பிக்கப்படுவதாக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 6:1