புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 04, 2018)

பரலோக ராஜ்யத்திற்குரியவர்கள்...

மத்தேயு 5:10

நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.


இந்த உலகிலே வாழும் மக்கள் பல தரப்பட்ட காரியங்களுக்காக பிரயாசப் படுகின்றார்கள். சிலர் உலக நீதிக்காகவும், வேறு சிலர் அநீதியானவைகளை நடப்பிப்பதற்காகவும், இன்னும் சிலர் தேவ நீதிக்காகவும் பிரயாசப்படுகின்றார்கள். அநீதியெல்லாம் பாவம். உலக நீதியானது (அதாவது, மனிதர்களுடைய பார்வையிலே நீதியாக எண்ணப்படுவது), இந்த உலகத்திலே நன்மையாக தோன்றினாலும், அந்த நீதியானது பரலோகத்திலே எந்த ஒரு காரியத்தையும் நடப்பிக்கப் போவதில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே, தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார். இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள், கிறிஸ் துவின் நற்செய்திப் பணிக்காக அநேக துன்பங்களை சகித்தார்கள். அவரு டைய நாமத்துக்காக அவமானமடைவதற்கு தாங்கள் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமடைந்தார்கள். கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவ னாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது. ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன். நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; உங்களை துன்பப்படுத்துகின்றவர்களாலே அவர் தூஷிக்கப்படுகிறார்;, உங்களாலே மகிமைப்படுகிறார் என்று பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கின்றோம் ஆதலால், தேவ நீதியாகிய கிறிஸ்துவின் நாமத்தில், அவருடைய நற்செய்தியின் நிமித்தம், அவருக்கென்று வாழும் வேறு பிரிக்கப்பட்ட பரிசுத்த வாழ்வின் நிமித்தம், நீங்கள் நன்மையையே சிந்தித்து, நன்மையையே மற்றவர்களுக்கு செய்யும் போது, நன்மையை பெற்றவர்கள் உங்களுக்கு அநீதி செய்தாலும், உங்கள் நற்கிரியைகளை கண்டு மற்றவர்கள் உங்களை துன்பப்படுத்தினாலும், மனமடிந்து போய்விடாதிருங்கள். நீதியினிமி த்தம் துன்பப் படுகிறவர்கள் பாக்கியவான்கள் பரலோக ராஜ்யம் உங்களுடையது என இயேசு கூறியிருக்கின்றார்.

ஜெபம்:

பரலோக தந்தையே,உம்முடைய சத்தியத்தின் வழியில் வாழும்போது, எங்களை எதிர்த்து வரும் எந்த உபத்திரவங்களைக் கண்டு மனம் தளர்ந்து போகாமல், உற்சாகத்துடன் செயற்பட கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - அப்போஸ்தலர் 5:41